(பொ - ள்) "காயிலை . . . வெயிலூடிருந்தும்" - கடுமையான பசி வந்தபொழுது கையிற்கிடைத்தது காயோ, இல்லையோ, சருகோ, கனியோ, தண்ணீரோ இவற்றுள் ஏதாவதொன்றை அப் பசி தணிக்க வயிற்றினில் அடைத்தும், (மழை தவழும் மாண்புமிக்க) பெரிய மலைகளிற்சென்று ஆங்குள்ள குகைளினிடையே கருங்கல்லைப்போன்று அசையாது இருகண்ணும் பெருக மூடி நெடுநாள் அசையாதிருந்தும் (ஐந்தீநாப்பண்) தீயின்நடுவிலிருந்தும், திருத்த நீர்களில் திருந்த மூழ்கியும், உடம்புகள் எலும்பு எலும்பாகத் தெரியும் வண்ணம் மெலிவுற்றிருந்தும் தலைமயிர்கள் (எண்ணெய்ச்சார்வின்மையால்) ஒட்டிய சடையாய்க் குருவிகள் வந்து அதனைக் கூடென எண்ணித் தங்குமாறு கடுவெயிலிலிருந்தும்;
"வாயுவை . . . முறையோ" - உயிர்ப்பினை முறையுற உள்ளடக்கியும், (மூச்சடங்கப் பேச்சடங்கும், பேச்சடங்கத் தானாகவே மனம் அடங்கும்) மனத்தினை அடக்கியும், வாய்வாளாமை எனப்படும் மௌனமாயிருந்தும், புருவநடுவாகிய திங்கள் மண்டிலத்திலே மூலத்தீயினை எழுப்பி உயிர்ப்பு வழியாகச் செல்லவிடுத்து ஆங்குள்ள அமிழ்தினை யுண்டு அழகிய காட்டகத்திருந்தும் மேலான அறிஞர் ஆராயப்பட்ட மறை முடிவான திருவடித் திருவருளை நாடினர். (அவர்கள் கைக்கொண்டொழுகும் உயர்ந்த பண்புகள் அனைத்திற்கும் தனித்தனி மாறாக) அடியேன் பொய்யுலகை மெய்யென்றெண்ணி நாடுதல் முறையாகுமோ (ஆகாதென்றபடி.)
"அண்டபகி . . . மானபரமே"-
(வி - ம்) முழை - குகை. வைகுதல் - தங்குதல்; இருத்தல்.
தவத்தோர்க்கு மாறா யிருத்தல் என்பது; அவர்கள் கடும்பசி வந்தால் காய், இலை, சருகு, கனி, தண்ணீர் முதலியவற்றை யுண்பது. ஏனையோர் பசியினைப் பாராது பொழுதினைப் பார்த்துக் கண்டமட்டும் அறுசுவையுண்டியினை வயிறுபுடைக்க உண்பது. இப்படியே ஒவ்வொன்றினையும் கருதிக்கொள்க.
(4)
சுத்தமும் அசுத்தமும் துக்கசுக பேதமுந் | தொந்தமுடன் நிர்த்தொந்தமும் | ஸ்தூலமொடு சூட்சமமும் ஆசையும் நிராசையுஞ் | சொல்லுமொரு சொல்லின்முடிவும் | பெத்தமொடு முத்தியும் பாவமொ டபாவமும் | பேதமொ டபேதநிலையும் | பெருமையொடு சிறுமையும் அருமையுடன் எளிமையும் | பெண்ணினுடன் ஆணும்மற்றும் |