"அல்லது . . . குறையுமோ" - அன்றியும் செயல்புரி முதல்வராய் உலகினுக்கு ஐந்தொழில் புரியும் திருவாணைத் தேவர்கள் எம்மையாளும் தன்மையால் சிலர் இஃது அடாது என்று கூறுவரோ? அல்லது யாண்டும் நீக்கமற விரிந்துள்ள நின்னுடைய பெருமைமிக்க நிறைவினுக்குக் குறைவு ஏற்படுமோ?
"பூதங்கள் . . . புகலாய்" - (அல்லது) பூதங்கள் அலகைபோல் வந்து பொருத்தமில்லாத சழக்குரை சாற்றிடுமோ? அல்லது அடியேனுக்குப் பரிபாககாலம் எனப்படும் செவ்வி தோன்றவில்லையோ? பழைமையாய் வருகின்ற அறிவில்லாத செறிந்த இருவினை எதிர்த்து வாயுரையாடுமோ? இவற்றுள் உண்மையான உள்ளார்ந்த உளவு என்ன என்பதை அடியேனுக்கு மொழிந்தருளுதல் வேண்டும்.
"இகபரமிரண் . . . பொருளே" -
(வி - ம்.) அல்லல் - துன்பம். அற - நீங்க. உலகம் - உயர்ந்தோர். விசித்திரம் - வியப்பு. ஓய்தல் - நின்றுவிடுதல். சங்கை - தடை. கிர்த்தியம் - செயல். கர்த்தர் - முதல்வர். அகிலம் - உலகம். அடாது - பொருந்தாது. பூரணம் - நிறைவு. விதண்டை - சழக்கு. பரிபாகம் - செவ்வி. சடம் - அறிவில்லது. உளவு - உள்ளுறை; செய்கை.
ஒருமை மனமுடையார் நிலை வருமாறு :
| "ஒடுங்கு நிலைபெற்ற உத்தமர் உள்ளம் |
| நடுங்குவ தில்லை நமனுமங் கில்லை |
| இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை |
| படும்பயன் இல்லை பற்றுவிட் டோர்க்கே." |
| - 10. 1598. |
வினைசட மென்னும் உண்மை வருமாறு :
| "வினையா மசத்து விளைவ துணரார் |
| வினைஞானந் தன்னில் வீடலுந் தேரார் |
| வினைவிட வீடென்னும் வேதமும் ஓதார் |
| வினையாளர் மிக்க விளைவறி யாரே." |
| - 90. 2516. |
(7)
நில்லாது தேகமெனும் நினைவுண்டு தேகநிலை | நின்றிடவும் மௌனியாகி | நேரே யுபாயமொன் றருளினை ஐயோஇதனை | நின்றனுட் டிக்க என்றால் | கல்லாத மனமோ வொடுங்கியுப ரதிபெறக் | காணவிலை யாகையாலே | கையேற் றுணும்புசிப் பொவ்வாதெந் நாளும்உன் | காட்சியிலிருந்து கொண்டு |