மரவுரி யுடுத்துமலை வனநெற் கொறித்துமுதிர் | வனசருகு வாயில்வந்தால் | வன்பசி தவிர்த்தும்அனல் வெயிலாதி மழையால் | வருந்தியு மூலஅனலைச் | சிரமள வெழுப்பியும் நீரினிடை மூழ்கியுந் | தேகநம தல்லவென்று | சிற்சுக அபேக்ஷையாய் நின்னன்பர் யோகஞ் | செலுத்தினார் யாம்பாவியேம் | விரவும்அறு சுவையினொடு வேண்டுவ புசித்தரையில் | வேண்டுவ எலாமுடுத்து | மேடைமா ளிகையாதி வீட்டினிடை வைகியே | வேறொரு வருத்தமின்றி | இரவுபக லேழையர்கள் சையோக மாயினோம் | எப்படிப் பிழைப்பதுரையாய் | இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி | எங்குநிறை கின்றபொருளே. |