பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

222
 
மருமலர்ச் சோலைசெறி நன்னீழல் மலையாதி
    மன்னுமுனி வர்க்கேவலாய்
  மந்த்ரமா லிகைசொல்லும் இயமநிய மாதியாம்
    மார்க்கத்தில் நின்றுகொண்டு
கருமருவு காயத்தை நிர்மலம தாகவே
    கமலாச னாதிசேர்த்துக்
  காலைப் பிடித்தனலை அம்மைகுண் டலியடிக்
    கலைமதியி னூடுதாக்கி
உருகிவரும் அமிர்தத்தை யுண்டுண் டுறங்காமல்
    உணர்வான விழியைநாடி
  ஒன்றோ டிரண்டெனாச் சமரச சொரூபசுகம்
    உற்றிடஎன் மனதின் வண்ணந்
திருவருள் முடிக்கஇத் தேகமொடு காண்பனோ
    தேடரிய சத்தாகிஎன்
  சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே
    தேசோ மயானந்தமே
     (பொ - ள்) "மருமலர்ச் . . . சேர்த்து" - நறுமணங் கமழ்கின்ற மலர்கள் நிறைந்த அடர்ந்த சோலைகள் சூழப்பட்ட நல்ல நிழலையுடைத்தாகிய மலை முதலியவற்றில் நிலைபெற்று வீற்றிருக்கும் முனிவர்கட்குப் பேரன்பு பூண்டு ஏவல் செய்தொழுகும் அடிமையாய், மந்திரமாலை என்று சொல்லப்படும் (திருமூலநாயனார் செய்தருளிய) தனித் தமிழாகமத்தில் ஓதியருளியபடி தீமைவிலக்குதலாகிய இயமமும், நன்மைதுலக்குதலாகிய நியமமும் மேற்கொண்டு அகத்தவமாகிய சிவயோக நன்னெறியில் நின்றுகொண்டு, கருவில் தோன்றித் துன்பங்களனைத்திற்கும் நிலைக்களமாகித் தூயவல்லாத இவ்வுடம்பினை மலமகற்றித் தூய்மைபாக்குதற் பொருட்டு எண்வகை இருக்கையுள் ஒன்றாகிய தாமரை இருக்கையினை மேற்கொண்டிருந்து;

     "காலைப் . . . விழியைநாடி" - உயிர்மூச்சினையடக்கி மூலத்திடத்துள்ள தீயினை எழுப்பி உச்சித்தொளையிலுள்ள திருவருளம்மையாகிய குண்டலியாற்றலின் திருவடியிற் காணப்படும் திங்கள் மண்டிலத்தின் ஊடுமுட்டச் செய்து, அதனால் உருகிவரும் மதி அமிழ்தத்தினை இடையறாது உண்டுகொண்டு உறங்காது உணர்வுடனிருந்து, திருவடியுணர்வாகிய ஞானக்கண்ணினால் (முதல்வனை) நாடி;

     "ஒன்றோ . . . சத்தாகி" - பேருயிராகிய முதல்வனும், ஆருயிராகிய ஆவியும் புணர்ப்பு நிலையில் ஒன்றென்றுரையாமலும், இரண்டென்று உரையாமலும் பொதுமையில் புணர்ப்பென்று புகலும் பொதுமை