பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

242
குறிக ளோடுகுண மேது மின்றியனல்
    ஒழுக நின்றிடும் இரும்பனல்
  கூட லின்றியது வாயி ருந்தபடி
    கொடிய ஆணவ அறைக்குளே
அறிவ தேதும்அற அறிவி லாமைமய
    மாயி ருக்குமெனை அருளினால்
  அளவி லாததனு கரண மாதியை
    அளித்த போதுனை அறிந்துநான்
பிறவி லாதவண நின்றி டாதபடி
    பலநி றங்கவரு முபலமாய்ப்
  பெரிய மாயையி லழுந்தி நின்னது
    ப்ரசாத நல்லருள் மறந்திடுஞ்
சிறிய னேனுமுனை வந்த ணைந்துசுக
    மாயி ருப்பதினி என்றுகாண்
  தெரிவ தற்கரிய பிரம மேஅமல
    சிற்சு கோதய விலாசமே.
     (பொ - ள்) "குறிக . . . மயமாயிருக்கும்" - கரும்பொன் எனப்படும் இரும்பானது அடையாளங்களுடன் குணங்கள் ஒரு சிறிதுமில்லாமல் தீயின் சார்பினால் அத் தீயொழுகும்படி அத் தீயாகவே நிற்கும்; (அத்தகைய இயல்புவாய்ந்த) அவ்விரும்பு தீயுடன் சேர்தலின்றி இரும்பாகவே இருந்த தன்மை போன்று (எல்லாத் தீமைகளுக்கும் மூலவித்தாயுள்ள) கொடிய ஆணவ வல்லிருள் மூடிய அறையினுள்ளே அறிதற்றன்மை ஒருசிறிதும் இல்லாமல் அறிவின்மையே வடிவமாயிருக்கும்;

     "எனை . . . அழுந்தி" - (ஆணவத்தால் மூடப்பட்டு அவ்வடிவாயிருக்கும்) அடியேனை, நின் திருவருளினால், எண்ணற்ற உடம்பு, உறுப்பு (உலகம், உண்பொருள்கள்) முதலியவற்றை (மாயாகாரியமாகக் கண்ணுதலால் படைத்து) அளித்தபோது நின் திருவடிப் பேற்றினை அறிந்து அடியேன் (நின்னைவிட்டுப்) பிரியாதவகை அழுந்தி நிலைத்திராமல், பலநிறங்களையும் கவர்ந்துகொள்ளும் இயற்கைத்தாகிய பளிங்குக்கல்லைப் போன்று, பெரிய மாயைப் பெருங்கடலினுள் ஆழ்ந்து;

     "நின்னது . . . யென்றுகாண்" - நின் தண்ணளியால் நல்கிய அருட்பெருங்கொடைத் திருவருளினை, அறவே மறந்து உழலுகின்ற (நாயினுங்கடையான) அடியேனும், நின் திருவடியினை வந்து புணர்ந்தணைந்து பேரின்பப் பெருவாழ்வாய் நிலைத்து இருப்பது எந்த நாளிலோ? (தெரிவ . . . விலாசமே - என்பதற்கு முற்பாட்டிலுரைத்துள்ள உரையினையே வருமிடந்தோறும் உரைத்துக் கொள்க.)