கானல் நீர் போன்று அடக்கமுறும்; அவ்வாறு அடங்கச் செய்யும் அறிவுப்பெருவெளியே! முதல் நடு முடிவென (எல்லைப்படும் பொருள் போல்) ஏதுமில்லாமல், பேரருளாய் யாண்டும் நீக்கமற நிறைந்து திகழ்கின்ற பேரொளியே!
"தொந்த . . . நீதியே" தொடர்புகொள்ளும் உருவத்துடன் அருவம் முதலாகியவற்றுக்குரிய அடையாளங் குணம் முதலியவற்றையும் கடந்து (எங்கும் நிறைந்து) பெருகிநிற்கின்ற மெய்ப்பொருளே, நாலாம் நிலையெனப்படும் துரியமே! அந்நிலையிலுள்ள துரிய உயிர்க்கு அறிவு விளங்கும்படி உடனாய் நின்று அருள்புரிகின்ற இயற்கைப் பேரறிவே! எக்காலத்தினும் நடுநிலையாக நின்றருளும் பேரொளிப் பெருமுதலே! பெருந்தண்ணளியோடு கூடிய முறையெனப்படும் மூவாநீதியே!
"எந்தை . . . உய்வனோ" - எமக்குரிய தந்தையே! என்று நெகிழ்ந்து நெகிழ்ந்து உருகாநின்ற அடியனேன் மனக்கவலை தீரவும், எளியேனுடைய உள்ளத் துறையும் எண்ணத்தினை உணர்ந்தருளி, (அடிகளே) நின்திருவருளைப் புரியவும் அடியேனும், அத் திருவருளைப் பெற்று இனிக் கடைத்தேறுதல் எய்தி வாழ்வனோ?
"தெரிவ . . . விலாசமே" -
(வி - ம்.) கானல்நீர் - பேய்த்தேர். பெருவானம் - அருட்பெருவெளி. தொந்தம் - பற்று; தொடர்பு. இடைந்து - நெகிழ்ந்து.
முதல்வன் குணங்குறிகடந்த முன்னோன் என்னு மெய்ம்மை வருமாறு:
| "பலகலைஆ கமவேதம் யாவையினுங் கருத்துப் |
| பதிபசுபா சந்தெரித்தல் பதிபரமே அதுதான் |
| நிலவும் அரு உருவின்றிக் குணங்குறிக ளின்றி |
| நின்மலமாய் ஏகமாய் நித்த மாகி |
| அலகிலுயிர்க் குணர்வாகி அசல மாகி |
| அகண்டிதமாய் ஆனந்த உருவா யன்றிச் |
| செலவரிதாய்ச் செல்கதியாய்ச் சிறிதாகிப் பெரிதாய்த் |
| திகழ்வதுதற் சிவமென்பர் தெரிந்து ளோரே." |
| - சிவப்பிரகாசம், 13. |
"சிவனருவுருவுமல்லன்" (பக்கம் 3.) என்பதையும் நோக்குக.
(3)