பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

261
 
ஆகார புவனமின் பாகார மாக
    அங்ஙனே யொருமொழியால் அகண்டா கார
யோகானு பூதிபெற்ற அன்ப ராவிக்
    குறுதுணையே என்னளவும் உகந்த நட்பே
வாகாரும் படிக்கிசைகிண் கிணிவா யென்ன
    மலர்ந்தமல ரிடைவாசம் வயங்கு மாபோல்
தேகாதி யுலகமெங்கும் கலந்து தானே
    திகழனந்தா னந்தமயத் தெய்வக் குன்றே,
     (பொ - ள்) "ஆகார . . . துணையே" - மிகவும் விரிந்து வடிவமாகக் காணப்படும் இப் பேருலகம் இன்பவடிவமாகத் தோன்றுதற்கு ஒப்பற்ற ஓர் உரையினால் எல்லையில்லாத வடிவாய்த் திகழ்தற்கு வாயிலாகிய (அகத்தவமெனப்படும்) யோகப்பேறு (திருவருளால்) பெற்றுள்ள மெய்யன்பர்தம் (மாசகன்ற) உயிர்க்கு (மிக்கோங்கித் திகழும் மேலாம்) உறுதுணையே!

     "என்னளவு . . . குன்றே" - (ஒரு சிறிதும் தகுதியில்லாத) அடியே னிடத்திலும் தண்ணளிபுரிந்து விரும்பி நண்பு வைத்து, அந் நட்பே அழகாகும்படி, கிண்கிணிவாயையொத்து விரிந்த நறுமலரிடையே மணம் தொக்குத் தோன்றி வீசுதல்போன்று, உடல் உலகம் முதலிய இடங்களினெல்லாம் நீக்கமறக் கலந்து நிறைந்து நின்று, தானேயாகி விளங்குகின்ற முடிவுபேறில்லாத பேரின்ப வடிவமான தெய்வத் திருமலையே! (திருவருள்புரிந்தருளினை.)

     (வி - ம்.) ஆகாரம் - உடல். புவனம் - உலகம். யோகப்பேறு - யோக அனுபூதி. உகப்பு - விருப்பம். வாகு - அழகு. வயங்குவது - விளங்குவது. வாசம் - மணம். அநந்தம் - முடிவுபேறில்லாதது. ஆனந்தம் - இன்பம். குன்று - மலை.

     ஆனந்தமலை சிவன் என்னும் உண்மை வருமாறு:

"அருணன்இந் திரன்திசை அணுகினன் இருள்போய்
    அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின்
 கருணையின் சூரியன் எழஎழ நயனக்
    கடிமலர் மலரமற் றண்ணலங் கண்ணாந்
 திரள்நிரை யறுபதம் முரல்வன இவையோர்
    திருபெருந் துறையுறை சிவபெரு மானே
 அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
    அலைகட லேபள்ளி எழுந்தரு ளாயே."
- 8. திருப்பள்ளி