பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

298
 
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
தேன்முகம் பிலிற்றும் பைந்தாட் செய்யபங் கயத்தின் மேவும்
நான்முகத் தேவே நின்னால் நாட்டிய அகில மாயை
கான்முயற் கொம்பே என்கோ கானலம் புனலே என்கோ
வானமுக முளரி என்கோ மற்றென்கோ விளம்பல் வேண்டும்.
     (பொ - ள்) "தேன்முகம் . . . தேவே" - தன்னினின்றுந் தேனை ஒழுக்கிக் கொண்டிருக்கும் பசுமையான தண்டினையுடைய சிவந்த தாமரை மலரிலிருக்கும் நான்கு முகங்களையுடைய திருவாணைபெற்று படைத்தற்றொழிற்கு உரிமை பூண்டுள்ள கடவுளே!

     "நின்னால் . . . வேண்டும்" - நின்னால் மாயாகாரியமாகப் படைக்கப்பட்டுக் சுழன்று கொண்டிருக்கும் இவ்வுலகம், காட்டில் வாட்டமின்றித் திரியும் முயற்கொம்பை ஒத்ததென்று கூறுவேனோ, கானல் நீரெனக் கரைவேனோ, வானத் தாமரையென்று வாய்மொழிவேனோ, அன்றி இவ்வில் பொருள்கட்கு வேறாவதென்று விளம்புவேனோ! நீயே சொல்லுவாயாக.

     (வி - ம்.) மாயை அழிவில்லாத உள்பொருளே என்று உணர்த்த "அகிலமாயை" என்றனர். கிலம் - அழிவுள்ளது. அகிலம் - அழிவில்லாதது. உள்வழக்காம் உண்மையில் அழிவென்னும் சொல்லுக்குப் பொருள் காரணத்தினின்றும் பருமையாய்த் தோன்றிக் காரியமாய்ச் சிலபொழுது நின்று மீண்டும் நுண்மையாய்க் காரிய முற்றும் அக்காரணத்தில் ஒடுங்குவதென்பதேயாம். இல்லாமல் பாழாய்ப்போம் என்பதன்று. முயற்கொம்பு, கானல் நீர், வானத்தாமரை இவை ஒன்றோடொன்று இயைபின்மைமாத்திரையே யன்றிப் பொருளின்மையல்ல.

(1)
 
வேண்டுவ படைத்தாய் நுந்தை விதிப்படி புரந்தான் அத்தைக்
காண்டக அழித்தான் முக்கட் கடவுள்தான் இனைய வாற்றால்
ஆண்டவ னெவனோ என்ன அறிகிலா தகில நீயே
ஈண்டிய அல்லல் தீர எம்மனோர்க் கியம்பு கண்டாய்.
     (பொ - ள்) "வேண்டுவ . . . கடவுள்தான்" - (நான்முகனே) உலகினரால் விரும்பப்படும் பொருள்களை எல்லாம் (திருவாணை வழிநின்று) நீ படைத்தனை; அதுபோல் உன் தந்தையாகிய மால் காக்கின்றனன். மூன்று திருக்கண்களையுடைய அரனாகிய உருத்திரன்றான் அழிக்கின்றனன்.

     "இனைய . . . கண்டாய்" - இம்முறையினால் உங்களுள் முதல் வராகக்கருதப்படும் கடவுள் யாவர்? உலகமெலாம் யாரென அறியாது மயங்குகின்றன. அம் மயக்கத்துன்பமகல நீயே சொல்லுதல் வேண்டும்.