பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

316
 
ஞானிகள் இடம் பொருள் ஏவல்
நினைவொன்று நினையாமல் நிற்கின் அகம் என்பார்
    நிற்குமிட மேயருளாம் நிட்டையரு ளொட்டுந்
தனையென்று மறந்திருப்ப அருள்வடிவா னதுமேல்
    தட்டியெழுந் திருக்குமின்பந் தன்மயமே யதுவாம்
பினையொன்று மிலையந்த இன்பமெனும் நிலயம்
    பெற்றாரே பிறவாமை பெற்றார்மற் றுந்தான்
மனையென்றும் மகனென்றுஞ் சுற்றமென்றும் அசுத்த
    வாதனையாம் ஆசைமொழி மன்னொருசொற் கொண்டே.
     (பொ - ள்) "நினைவொன்று . . . அதுவாம்" - ஆசான் அருளிய அருமறையின் வண்ணம் நின்று சிவனினைவல்லது, வேறு உலகியல் நினைவொன்றும் நினையாமல் நிற்போமாயின் அவ்விடமே நிலையான அருளகமாகிய பொருளிடம் என்பர்; அங்ஙனம் நிற்குமிடத்தே அருளியலென்று சொல்லப்படும் மேலாம் நிட்டை நிலைவந்து பொருந்தும்; ஒருவன் எந்நாளும் தன்னை அறவே மறந்திருப்பானாயின் அவ்விடத்து அருள்வடிவானது ஊக்கித்தட்டி எழுப்பும்; எழுந்த விடத்துண்டாம் இன்பந் தன்வண்ணமாகும்; அதுவே இன்ப அருள் நிலையாம்.

     "பினையொன்று . . . . . . கொண்டே" - வேறொன்றுமில்லை; அப்பேரின்ப மென்னும் பெருநிலையினைத் திருவருளால் அடைந்தவர்களே பிறவாமையாகிய பெருஞ்செல்வப் பேற்றினை அடைந்தவர்களாவர். அங்ஙனமன்றி மீண்டும் வீடென்றும், மக்கள் என்றும், உறவென்றும் சொல்லப்படும் மாயா காரியமாகிய உடலின் தொடர்பாற் கொள்ளும் நீங்கா அவாவினை முன்மெய்யுணர்வு தந்தருளிய சிவகுருவின் ஒப்பிலா ஒருமொழியினைக் கொண்டே நீக்கி விடுதல் வேண்டுமென்க.

(1)
 
ஒருமொழியே பலமொழிக்கும் இடங்கொடுக்கும் அந்த
    ஒருமொழியே மலம் ஒழிக்கும் ஒழிக்குமென மொழிந்த
குருமொழியே மலையிலக்கு மற்றைமொழி யெல்லாங்
    கோடின்றி வட்டாடல் கொள்வதொக்குங் கண்டாய்
கருமொழியிங் குனக்கில்லை மொழிக்குமொழி ருசிக்கக்
    கரும்பனைய சொற்கொடுனைக் காட்டவுங்கண்டனைமேல்
தருமொழியிங் குனக்கில்லை யுன்னைவிட்டு நீங்காத்
    தற்பரமா யானந்தப் பொற்பொதுவாய் நில்லே.