பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

35

     (பொ - ள்.) 'ஆழாழி . . . வளையவிலையோ' - மிகுந்த ஆழமாகவுள்ள கடலானது செய்கரையில்லாமலே (சிவபெருமானே! நின் திருவாணைக்கு அடங்கித்) தன் எல்லை கடவாது அடங்கி நிற்க இல்லையோ? கொடிய (கண்டாரைக் கொல்லும் பெரு நஞ்சாகிய) ஆலாலமானது உன் திருவருட்குத் திருவமிழ்த வுணவாக மாறுதல் எய்தவில்லையோ? (மூன்று தன்மைகளையுடைய சிறப்பான) அப் பெருங்கடலின் நடுவே வடவைத் தீயானது, அவியாமல் நிலைநிற்கவில்லையோ? வானத்தின் நடுவில் அளவில்லாதனவாகிய அண்டங்கள் ஒன்றுக் கொன்று ஏற்றத்தாழ்வின்றி ஒப்ப நின்று கவிழாமல் ஒன்றோடொன்று ஈர்ப்பாற்றலுக்கு உட்பட்டு நிலைநிற்கவில்லையோ? மேருவென்று சொல்லப்படும் பனிமலை ஒருகாலத்து வளைந்து நின் திருக்கை வில்லாக அமையவில்லையோ?

     'சத்தமே . . . யாகவிலையோ' - எழுவகையாகச் சொல்லப்படும் மேகங்களும் (நின் திருவருள் பெற்றுத் தன்றொழில் நடத்தும்) இருதலைச் சூலமாகிய வச்சிரப்படையினையுடைய வானவர்கோன் கட்டளையினால் முறையுறப் பொழியவில்லையோ? புகழுடன் வாழும்படி இள நங்கையாகிய அகலிகையானவள் (முன்னை மொழியின்படி) இராமன் கால்பட்டதும் கல்வடிவம் நீங்கிப் பண்டைய பெண் வடிவம் எய்த வில்லையோ?

     'மணிமந்த்ர . . . உனக்கருமையோ' - சிவமணியாலும், திருவைந் தெழுத்தாகிய செந்தமிழ் மந்திரத்தாலும், திருவெண்ணீறு முதலாகிய மருந்துகளாலும் (நின் திருவருள் துணைபெற்ற) அவரவர்கள் விழைந்துள்ள பேறுகளாகிய சித்திகளை உலகியல் முறையில் வைத்தருள வில்லையே? பயன்பெறப் பயிலாத பாழான அடியேனுடைய மனமானது உள் முகப்பட்டு ஒடுங்கி, நின் திருவடியில் (கைகளிரண்டும் உச்சிமேலேறிக் குவிவதொத்துக்) குவிய ஒரு செய்முறை பண்ணியருள்வது நின் திருவருட்கு அருமையாகுமோ? (இல்லையென்றபடி)

         'பார்க்குமிட . . . ணானந்தமே.'

     (வி - ம்.) ஆழி - ஆழத்தையுடையது, வட்டமாயிருப்பது. கடல் இவ்விரண்டு தன்மைகளையு முடையது. ஆலாலம் - பெருநஞ்சு. மேரு - பொன்மலை; பனிமலை. தனு - வில். சத்த மேகங்கள் - ஏழு மேகங்கள். சஞ்சரித்தல் - பொழிதல். வாழாது வாழ்தல் - புகழொடு வாழ்தல். மணி - சிவமணி; உருத்திராக்கம்.

     கடல் : முன்னீர் எனவும், முந்நீரெனவும் வழங்கப்படும். முன்னீர் என்பது உலகந் திருவருளால் தோன்றுவதற்கு முன் யாண்டும் நீர் மயமாயிருந்தமையால் உலகத்திற்கு முன்னிருந்த நீரென்றாகும். மேலும் கடல் உலகினை வளைந்து சூழ்ந்திருப்பதால் யாண்டு நின்று நோக்கினும் நோக்குவார்க்கு முன்னிற்பது கடலேயாம். அதனாலும் முன்னீர் எனப்பட்டது என்றலும் ஒன்று. இனி முந்நீர் என்பது மூன்று நீர்கள் என்றாகும். அஃதாவது ஆற்றுநீர், ஊற்றுநீர், மேல்நீர், (மழை) என்பனவாகும். மேலும் முந்நீர் என்பது திருவருளால் தான் சுருங்கி உலகந் தோன்றியதால் உலகத்தைப் படைத்தலாகவும், கரையின்றி