(பொ - ள்) நீக்கமுடியாத பேரிடர் வந்து பொருந்தியகாலத்து நமக்கு உறுதுணையாக இங்குள்ள சுற்றமோ நம்மைக் காக்கும்? நெஞ்சமே நாடிச் சொல்வாயாக. அடர்த்தியும் நீட்சியும் உடைய திருச்சடையினைக் கொண்டருளிய கண்ணுதற் கடவுளின் திருவடியே நீங்காப் பற்றாகும்; அதனைப் பற்றின் மேலான பேரின்பம் தானே வந்து நம்மைப் பற்றும்.
(77)
பற்ற லாம்பொரு ளேபரம் பற்றினால்
உற்ற மாதவர்க் குண்மையை நல்குமே
மற்றும் வேறுள மார்க்கமெ லாமெடுத்
தெற்று வாய்மன மேகதி எய்தவே.
(பொ - ள்) இறவாத இன்ப அன்பினால் பற்றத்தகும் மேலாம் பொருனாகிய சிவபெருமானைப் பற்றினால் ஒருவர் மாதவராவர், அவர்க்கு அச் சிவன் தன் உண்மையாகிய திருவடியிணை நல்கியருள்வன். இவ்வுண்மையை விடுத்து வேறுள நெறிகளும் உண்டென மயங்காது அவற்றை நெஞ்சமே எடுத்தெறிவாயாக. அதுவே சிவனிலை எய்துவதற்கு வழியாகும்.