பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

362
வல்லிருள் அகலும் பொருட்டு முதன்மை அறிவு நிறைந்த பசுமையான கொம்பை யொத்த உமையம்மையாரைத் தன்னுள் அடக்கிக் கொண்டு ஒப்பில்லாத கல்லால மரத்தடியில் வீற்றிருந்தருளும் பேரின்பப் பெருவேந்தே, மெய்யன்பர்களைத் தன்திருவடிக்கீழ் தலைமறைவாக வைத்தருள்தல் எனப்படும் விழுங்குதலைச் செய்தருளினை.

     (வி - ம்.) வடிவிலா வடிவு-சிவலிங்கம். படி - உலகம். காரணப் பொருள்கள் எஞ்ஞான்றும் வடிவ முடையனவாகா இவ்வுண்மை வருமாறு:

"அன்றிவரும் ஐம்புலனும் நீயும் அசையாதே
 நின்றபடி யேநிற்க முன்னிற்கும் - சென்று
 கருதுவதன் முன்னம் கருத்தழியப் பாயும்
 ஒருமகள்தன் கேள்வன் உனக்கு."
- திருக்களிற்றுப்படியார், 35.
(10)
 
 
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
சொல்லற் கரிய பரம்பொருளே
    சுகவா ரிதியே சுடர்க்கொழுந்தே
வெல்லற் கரிய மயலிலெனை
    விட்டெங் கொளித்தாய் ஆகெட்டேன்
கல்லிற் பசிய நாருரித்துக்
    கடுகிற் பெரிய கடலடைக்கும்
அல்லிற் கரிய அந்தகனார்க்
    காளாக் கினையோ அறியேனே.
     (பொ - ள்) அளவிட்டுக் கூறுதற்கு முடியாத மேலான மெய்ப் பொருளே! பேரின்பப் பெருங்கடலே. பேரொளிக் கொழுந்தே! வெல்லுதற்கு முடியாத மாயை மயக்கினிலிருக்க அடியேனை விட்டுவிட்டு அடிகளே எங்கொளித்தருளினை? அந்தோ புகலில்லாத எளியேன் கெட்டொழிந்தேன் (காலக்கணக் கெண்ணிக் கொண்டிருந்து நோவாதா ரனைவரையும் ஒருகணமும் தாழ்த்தாது உயிர்கொண்டு செல்லும்) நமன் கருங்கல்லிற் காணப்படாத பசிய நாரினை உரித்தலும், நுணுகிய கடுகினைத் தொளைத்துப் பெருகிய கடலினை அடைத்தலும் ஆகிய வியத்தகு செயல்களையும் செய்வன்; திணிந்த இருளும் மருளும் படியான பெரியகரிய நிறத்தன். அவன் அழிப்போன் என்னும் நிலையில் அந்தகனென்னும் பெயர் பெற்றோன். அவனுக்கு அடிமையாகி இன்னும் பிறப்பிற்குள்ளாக்குவையோ? அறியேன்.

(1)