பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

368
வீட்டைக் கருதும் அப்போது
    வெளியாம் உலக வியப்பனைத்தும்
ஏட்டுக் கடங்காச் சொப்பனம்போல்
    எந்தாய் இருந்த தென்சொல்வேன்.
    (பொ - ள்.)யானல்லாத இந்த உடற்சுமையைப் பெற்றுக் கொண்டு எனதென மதிக்கும்படி என்பாற் சுமத்தி, அடியேனையுஞ் சுமையாளாக இணைத்துப்பிடித்து இருவினையின் வழியாகக் கூத்தாடும் படி1 செய்தருளினையே; நின்திருவருளால் நின் திருவடிப்பேறாகிய வீட்டினை மெய்ம்மையாக நாடும்போது உலக உண்மை வெளிப்படுகின்றது. அப்பொழுது (உலகுடல்களின் தோற்ற வொடுங்கங்களாகிய நிலையாமை நீடு தோன்றுகிறது, தோன்றியதும்) உலகம் கனவு போல் தோன்றிப் பற்றுறுதற்கு வாயில் இல்லாமல் போகின்றது. மேலும் இது முன் மிகவும் வியப்புடைய உலக மென்று எண்ணிய எண்ணங்க ளெல்லாம் ஏட்டில் எழுதமுடியாத கனவுபோல் இருக்கின்றது. எந்தையே! இந்நிலையினை என்ன என்று கூறுவது?

    (வி - ம்.) மெய்யுணர்ந்தார்க்கு மாயைத் தொடக்கு இல்லை. இதனால் மாயையே இல்லையென்பதன்று. அழியாப் பொருள்கள் ஒரு காலத்து இல்லை யென்பது பொருந்தாது. படித்துத் தேறிய மாணவனுக்குப் பள்ளித்தொடர்பு இல்லை யென்பது மெய்ம்மையே; அதனால் பள்ளிக்கூடம் அழிந்துபட்டுப் போகாது. இதுவே மேலதற் கொப்பாகும்.

(10)
 
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
வம்பனேன் கள்ளங் கண்டு மன்னருள் வெள்ள ராய
உம்பர்பால் ஏவல் செய்யென் றுணர்த்தினை ஓகோ வானோர்
தம்பிரா னேநீ செய்த தயவுக்குங் கைம்மா றுண்டோ
எம்பிரான் உய்ந்தேன் உய்ந்தேன் இனியொன்றுங் குறைவி லேனே.
    (பொ - ள்.)பொருந்தாச் செய்கையினையுடைய பொல்லாங்குள்ள அடியேனது வஞ்சகத்தினைக் கண்டும், நின் திருவருள் வெள்ளத்தராகிய மெய்யுணர்வுச் செல்வராம் அடியவர்கட்குத் தொண்டு புரிவாயாக வென்று பணித்தருளினை; இங்ஙனம் அருளியது மிக்க வியப்புடையதாகும். தேவதேவனாய் விளங்கும் தம்பிரானே! நீ செய்தருளிய பெருந்தண்ணளிக்கு அடியேன் செய்யும் ஈடு ஏதேனும் உண்டோ? எம்பிரானே எளியேன் பிறவிப்பெருங்கடலினின்று கடைத்தேறினேன்; தேறினேன். இனி ஒன்றாலுங் குறைவில்லாதவனாயினேன். உம்பர் - சிவனடியார்.

 1. 
'வானாகி.' 8. திருச்சதகம், 15