பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

372
எந்தையே! நின் திருவடிக்கண் வைக்கவேண்டிய பத்தியன்பு சிறிதுமின்றி மிகுதியான மயக்கத்தையும் கொடுமையினையும் காட்டும், வேல்போலும் கண்களையும், கருமைமிக்க கூந்தலையும் உடைய மாலார் பெண்களின் மயக்கத்தில் வீழ்ந்து ஆழ்ந்து (பயன்பெறும்) நெறியிற் செல்லாத வீணன் வருந்தவோ? (தோன்றினன்) குடிலம் - வஞ்சனை; கொடுமை.

(10)
 
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
சிவன்செய லாலே யாதும் வருமெனத் தெறேன் நாளும்
அவந்தரு நினைவை யெல்லாம் அகற்றிலேன் ஆசை வெள்ளங்
கவர்ந்துகொண் டிழுப்ப அந்தக் கட்டிலே அகப்பட் டையோ
பவந்தனை ஈட்டி ஈட்டிப் பதைக்கின்றேன் பாவி யேனே
    (பொ - ள்.) (உலகின்கண் ஆருயிர்களாலும், உயிரில் பொருள்களாலும் நிகழ்த்தப்பட்டு வரும் இருவினைக் கீடாம் செயல்கள் அனைத்தும் திருவருளாணையால் நிகழ்வனவேயாம் அதனால்) எச்செயலும் சிவன் செயலால் நிகழும் எனத் தெளிய மாட்டேன். எந்நாளும் பிறப்பினுக்கு வித்தாய்ப் பொழுது போக்கும் வீண்செயல்களையே எண்ணும் பொல்லா நினைவுகளைப் போக்குதல் செய்யேன். அளவில்லாத ஆசைப் பெருவெள்ளம் எளியேனைக் கவர்ந்து ஈர்த்துக்கொண்டு செல்ல அவ்வாசைப் பிணிப்பிலே சிக்கி ஐயகோ! அளவில்லாத பாவங்களை இயற்றி இயற்றி உள்ளம் பதைக்கின்றேன்; பாவியாகிய யான்.

(1)
பாவியேன் இனியென் செய்கேன் பரமனே பணிந்துன் பாதஞ்
சேவியேன் விழிநீர் மல்கச் சிவசிவ என்று தேம்பி
ஆவியே நிறைய வந்த அமுதமே என்னேன் அந்தோ
சாவிபோஞ் சமயத் தாழ்ந்து சகத்திடைத் தவிக்கின் றேனே.
    (பொ - ள்.) கொடும் பாவியாகிய எளியேன் இனிமேல் என் செய்யவல்லேன்; மேலாம் மெய்ப்பொருளே, உன் திருவடியினைப் பணிந்து வழிபாடு செய்கிலேன்; காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கச் "சிவசிவ" என்னும் நான்காம் நிலையாகிய அறிவினர் மேற்கொள்ளும் செந்தமிழ் முடிமறையினைச் சிவஞ்செய்து, வாட்டமுற்று அடியேன் உயிரினுக்கு உயிரே, உள்ளும் புறம்பும் வெள்ள மெனப் பெருகும் பேரின்ப அமிழ்தமே என்றென்று இடையறாது போற்றேன். ஐயோ சாவிபோன்று பயனின்று கழியும் ஏனைச் சமயக்குழியில் ஆழ்ந்து இவ்உலகின்கண் வலைப்பட்ட மான்போல் அலைப்பட்டு வாடுகின்றேன்.