அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்
தன்னை யொருவர்க் கறிவரிதாய்த் | தானே தானாய் எங்குநிறைந் | துன்னற்கரிய பரவெளியாய் | உலவா அமுதாய் ஒளிவிளக்காய் | என்னுட் கலந்தாய் யானறியா | திருந்தாய் இறைவா இனியேனும் | நின்னைப் பெருமா றெனக்கருளாம் | நிலையைக் கொடுக்க நினையாயோ. |
(பொ - ள்.) முதல்வனே! நின்னை ஒருவருக்கும் அறிதற்கு முடியாததாய், தனக்குத்தானே ஒப்பாய், எங்கும் நீக்கமற நிறைந்த பெருநிறைவாய் நெருங்குதற்கு அரிய பரவெளியாய், அழிவில்லாத அமிழ்தாய், மங்காது ஒளிவிட்டுத் திகழ்ந்துகொண்டிருக்கும் சுடர் விளக்காய், அடியேன் உள்ளத்துக் கலந்திருந்தாய்; அதனை யான் அறிந்துகொள்ள முடியாதபடி மறைந்து மிருக்கின்றனை, முதல்வனே இனியாவது எளியேன் நின்னைப் பெற்று உய்யுமாறு திருவுள்ளங் கொண்டருள்வாயாக. அத்தகு பெருநிலையை எளியேனுக்கு நல்க நினைந்தருள்வாயாக.
(1)
நினையு நினைவுக் கெட்டாத | நெறிபெற் றுணர்ந்த நெறியாளர் | வினையைக் கரைக்கும் பரமஇன்ப | வெள்ளப் பெருக்கே நினதருளால் | மனைவி புதல்வர் அன்னைபிதா | மாடு வீடென் றிடுமயக்கம் | தனையும் மறந்திங் குனைமறவாத் | தன்மை வருமோ தமியேற்கே. |
(பொ - ள்.) (முதல்வன்றன் உண்மைநிலை மாற்றம் மனங்கழிய நிற்பதொரு மாண்பு நிலை. அதனால் அந்நிலை. உணர்விற் கலந்து உணர ஓண்ணும், ஆனால்) உலகியற் சுட்டுப் பொருள்களை நினையும் வாயிலாகிய கருத்துக்கு எட்டாத நெறியாகிய மௌன நிலையினை அடைந்து, அந்நிலையில் உறைத்துநின்று நின்திருவருளால் நின்னையுணர்ந்த நன்னெறியாளர்தம் இருவினையினை நாளுக்கு நாளாகக் கரைவித்து அறவே அகற்றுவிக்கும் மேலான பேரின்பப் பெருவெள்ளப் பெருக்கே, நின்னுடைய திருவருளால் மனைவி, மக்கள், தாய், தந்தை, செல்வம், வீடு முதலியவற்றின் மெய்ம்மையோராது மயக்கும் மயக்கந்தனை