(வி - ம்.) சிவபெருமான் நஞ்சினை அமிழ்தாக்கியுண்டமையைச் சித்துச் செயலென மொழிந்தது. உலகோர் உணரும் உணர்வின்வழி உணர்த்தவேயாம். உண்மைச் சித்தர்கள் செய்யும் சித்துச் செயலனைத்தும் இறைவன் திருவருள்வழி நிகழ்வனவேயாம். எனவே அச்செயல் இயல்பாகவே நிகழ்ந்தனவாம் என்க. விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல், உண்ணிய புகிலவை ஒன்று மில்லையாதல் போன்றதாகும். அடியார்கள் ஐயமேற்றுண்டல் திருவடிமெய்யன்பர்களின் செய்தவம் முற்றுறுவுதற் பொருட்டேயாம். நிலையினின்றருந்தல், உலையாச்சிவ முயற்சியோடு தலையாய தவமுமாம். இவ்வுண்மை வருமாறு :
"வாழ்ந்தன மென்று..............
சிதவ லோடொன் றுதவுழி யெடுத்தாங்
கிடுவோ ருளரெனின் நிலையினின், றயின்று"
- 11. பட்டினத்துப்பிள்ளையார், திருவிடை. மு - 7
(9)
எனக்கென் றிருந்த உடல்பொருளும்
யானும் நினவென் றீந்தவண்ணம்
அனைத்தும் இருந்தும் இலவாகா
அருளாய் நில்லா தழிவழக்காய்
மனத்துள் புகுந்து மயங்கவுமென்
மதிக்குட் களங்கம் வந்ததென்னோ
தனக்கொன் றுவமை அறநிறைந்த
தனியே தன்னந் தனிமுதலே.
(பொ - ள்.) தனக்குவமையில்லாத எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கின்ற தனிப்பெருமுதலே! (நின்திருவருளால் இரவலாகத் தரப்பட்டு என்பால்) எனக்கென்றிருந்த உடல் பொருள் ஆவி மூன்றும் நின்னுடையன வென்று மெய்யுணர்ந்து நின்திருவடிக்கு ஒப்புவித்த முறையாக உறுதிப்பாட்டுடன் (அடியேன்பால் அவையிருப்பினும் உரிமை நின்பாலதாக் கொண்டு) திருவருள் வழி நில்லாமல் அழிவழக்காய் எளியேனுடையன என்று என்மனத்துட் டோன்றி மயக்கமுறும்படி அடியேன் அறிவின்கண் வந்த குற்றம் யாதோ?