வண்டுளப மணிமார்பன் புதல்வனோடும் | மனைவியொடுங் குடியிருந்து வணங்கிப்போற்றும் | புண்டரிக புரத்தினில்நா தாந்தமௌன | போதாந்த நடம்புரியும் புனிதவாழ்வே. |
(பொ - ள்.) வளப்பமிக்க துளசிமாலையினையும், கவுத்துபமணி மாலையினையும் அணிந்துள்ள திருமார்பினையுடைய திருமாலும், அவர்தம் பிள்ளையாகிய நான்முகனொடும், மனைவியாகிய திருமகளோடும் நீங்கா துறைந்து காலந்தோறும் காதலொடுஞ் சென்று இடையறாது தொழுது போற்றுகின்ற தில்லைத் திருச்சிற்றம்பலமாகிய திருப்புலியூரின்கண், ஒலிமுடிவாகிய நாகாந்தமும், மனமுடிபாகிய மௌனமும், உணர்வுமுடிபாகிய போகாந்தமும் கடந்த திருவருள் வெளியில் திருக்கூத்தியற்றும் தூய வாழ்வானவனே! நீ நின் திருவருளாற்றலால் அண்டமெனப்படும் உலகங்களாகியும் அவற்றின் பகுதியாகிய உடல்களாகியும், இவ்வுடலுட் டங்கும் ஆருயிர்கட்கோர் உயிராகியும் அமர்ந்தருள்வாயானால் உன்னை எவர்கண்டு வழிபடுவர்? அதனைக் கேட்டவர் யார்? உன் திருவருளால் உன்னைக் காண்பதல்லால் எளியேன் சிற்றறிவால் காணமுடியுமோ?
(வி - ம்.) ஒருவர் அகத்துக் காப்பின்கண் வைக்கப்பட்டுள்ள பொருளை அவர் தாமே காட்டக் காண்பதல்லாமல் புறத்துள்ளார் வேறு எவ்வகையாற் காண்டலியையும்? வித்தின்கண்ணுள்ள விளைவை அவ் வித்தே முளைத்துத் தோன்றி வெளிப்படுத்தினல்லது பிறர் எங்ஙனங் காண்பர்? ஒருவர்தம் அரிய எண்ணத்தை அவர் தம் சொற்செயல்களானன்றி பிறர் எங்ஙனம் காண்பர்? இவை போன்று ஆண்டவனும் தன்னைத் தன்திருவருளால் காட்டினாலன்றி வேறெவ்வாற்றானும் காண்டல் இயலாது. முடிபுகளாகிய அந்தங்கள் ஆறென்ப. அவை வருமாறு :
| "வேதத்தின் அந்தமும் மிக்கசித் தாந்தமும் |
| நாதத்தின் அந்தமும் நற்போத அந்தமும் |
| ஓதத் தகுமெட் டியோகாந்த அந்தமும் |
| ஆதிக்க லாந்தமும் அறந்த மாமே." |
| - 10. 2329. |
திருத்தில்லையினுக்குப் புண்டரீக புரமெனும் திருப்பெயர் வழங்குகின்றது. புண்டரீகம் என்பது புலியையும் தாமரையையும் குறிக்கும். உபமன்னியமுனிவரின் தந்தையார் திருப்பெயர் புலிக்கால் முனிவர். அவர் வழிபாடியற்றி வந்த காரணத்தால் திருப்புலியூர் என்னும் திருப்பெயர் உண்டாகியது. அப்பெயரினையே புண்டரீகபுரம் என்றனர். தாமரை யென்னும் பொருளில் நெஞ்சத்தாமரை எனக்கொண்டு, அதனை அறிவு வெளி என உருவகித்துப் புண்டரீகபுரம் என்று உரைத்தனர். இதனைச் சிதம்பரம் எனக் கூறுப. வையத்து நாப்பண் வயங்குதிருத்தில்லை வனம் இருப்பதால் துய்யதிருத்தாமரையூ ரென்ப.
(12)