பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

40

இன்னும் என்றும் அழியாமல் அவ்வுடலுடனே கூடியிருக்க நினைந்து காயகற்பமென்னும் மருந்து தேடி உள்ளுடைந்து நெஞ்சு புண்ணாவா; இவ்வனைத்தும் ஆழ்ந்து எண்ணுங்காலை வயிற்றுப் பசிநோய் தீரச் சோற்று மருந்துண்ணவும், (காமநோய் தீரச் சிற்றின்ப நுகரலும்) உடலிளைப்புத் தீர அயர்ந்து உறங்குவதுமாகவே முடியும்;

     'உள்ளதே . . . நிலையை அருள்வாய்' - (ஆதலால்) வினைக்கீடாகக் கிடைத்தவற்றை உள்ளதே போதுமென்று நிறைவுற்று (ஆணவ முனைப்பினால்) நான் நான் என்று ஆங்கார மேலிட்டுக் குளறுதல் புரிந்து (நுகர்பொருள்களாகிய புலன்களுள்) ஒன்றைவிட்டு ஒன்று பற்றிப், பாசமெனப்படும் மும்மலப் பிணிப்பாகிய பெருங்கடலுள் வீழாமல், மனமடங்குதலாகிய தூய (அடிமை) நிலையினை அடியேற்கு அருள்புரிவாயாக.

         'பார்க்கு . . . ணானந்தமே.'

     (வி - ம்.) அளகேசன் - பொருட்கிழவன்; செல்வக் கடவுள். காயம் - உடல். கற்பம் - உடம்பினை அழியாமல் வைத்திருப்பதற்குரிய மருந்து. பரிசுத்தம் - மாசின்மை; தூய்மை.

     ஆசை அடங்காமையை வரும் செந்தமிழ்ப் பொதுமறையான் உணர்க:

"ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
 பேரா இயற்கை தரும்."
- திருக்குறள், 370.
மேலும் திருமுறை ஓதுவதுங் காண்க:

"ஆசை யறுமின்கள் ஆசை யறுமின்கள்
 ஈசனோ டாயினும் ஆசை யறுமின்கள்
 ஆசை படப்பட ஆய்வருந் துன்பங்கள்
 ஆசை விடவிட ஆனந்த மாமே."
- 10 - 2570.
(10)
 
நித்தியமாய் நிர்மலமாய் நிட்களமாய் நிராமயமாய்
    நிறைவாய் நீங்காச்
  சுத்தமுமாய்த் தூரமுமாய்ச் சமீபமுமாய்த் துரியநிறை
    சுடராய் எல்லாம்
வைத்திருந்த தாரகமாய் ஆனந்த மயமாகி
    மனவாக் கெட்டாச்
  சித்துருவாய் நின்றவொன்றைச் சுகாரம்பப் பெருவெளியைச்
    சிந்தை செய்வாம்.