கலிநிலைத்துறை
எனக்கே னச்செயல் வேறிலை யாவுமிங் கொருநின் | தனக்கெ னத்தகும் உடல்பொரு ளாவியுந் தந்தேன் | மனத்த சத்துள அழுக்கெலாம் மாற்றியெம் பிரான்நீ | நினைத்த தெப்படி யப்படி அருளுதல் நீதம். |
(ஒளியின் துணையின்றி விழியின் ஒளி பயன்படாமை போன்று) அடியேன் நின் திருவருளின் துணையின்றி எச்செயலும் செய்ய இயலாமையான் எல்லாம் இவ்விடத்து நின்னுடையதென்று சொல்லத்தகு முண்மையில், எளியேன்றன் உடல் பொருள் ஆவி மூன்றும் நின்திருவடிக்கே ஒப்புவித்தேன்; அடியேன் மனத்தகத்துள்ள மாசெல்லாம் மாற்றி எம்பிரானே! நீ திருவுள்ளங்கொண்டருளியபடி எப்படியோ அப்படியே அருளுதல் முறைமையாகும்.
தன்னிழப்பின் உண்மை வருமாறு :
| 'சலமிலனாய் ஞானத்தால் தனையடைந்தார் தம்மைத் |
| தானாக்கித் தலைவனவர் தாஞ்செய்வினை தன்னால் |
| நலமுடனே பிறர்செய்வினை யூட்டியொழிப் பானாய் |
| நணுகாமல் வினையவரை நாடிக் காப்பன் |
| உலகினில்என் செயலெல்லாம் உன்விதியே நீயே |
| யுண்ணின்றுஞ் செய்வித்துஞ் செய்கின்றா யென்றும் |
| நிலவுவதோர் செயலெனக்கின் றுன்செயலே யென்றும் |
| நினைவார்க்கு வினைகளெல்லாம் நீங்குந் தானே" |
| - சிவஞானசித்தியார், 10. 2 - 2 |
(1)
உளவ றிந்தெலாம் நின்செய லாமென வணர்ந்தோர்க் | களவி லானந்தம் அளித்தனை அறிவிலப் புன்மைக் | களவு நாயினேற் கிவ்வணம் அமைத்தனை கருத்துத் | தளருந் தன்மையிங் காரொடு புகலுவேன் தக்கோய். |
(பொ - ள்.) தனித்தமிழ் மெய்ந்நூல்களின் உள்ளம்போன்று காணப்படும் உண்மைகளை நின் திருவருளால் உணர்ந்து உலகிடைக் காணப்படும் எவ்வகைச் செயலும் நின் திருவருட் செயலாமென உணர்ந்த மெய்யுணர்வினர்க்கு அளவில்லாத பேரின்பப் பெரும் பேற்றை அளித்தருளினை; அறிவு சிறிதுமில்லாத கீழ்மைக்குண நிறைந்த களவு முதலிய குற்றங்கள் நீங்காத நாய்போன்ற அடியேனுக்கு உலகிடையுழன்று துன்புறுதலாகிய இந்நிலையினை அமைத்தருளினை; அத் துன்பத்தால் மனந்தளரும் எளியேன் நிலையினை இங்கு யாரொடு புகலுவேன்; தக்கோனே!
(2)