பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

431
மடம்பெறு மாயை மனமே இனியிங்கு வாமவுனி
திடம்பெற வைத்த மவுனஞ் சகாயந் தெரிந்துகொள்ளே.
    (பொ - ள்.) அகன்ற பெரிய வளமனை எனப்படும் வீடும், மின் போலும் இடையினையுடைய பெண்டிரும், இன்பம் மிகுவிக்கும் பிள்ளைகளும், எண்ணிறந்த பெரும் பொருளும், இவ்வுடம்பை விட்டு அருமையான உயிர்போகும்போது ஒருங்குசேர்ந்து உடன்வருமோ? (வருவதில்லை.) அறியாமை பொருந்திய மாயாகாரிய மனமே, இனிமேல் என் அருகில் வருவாயாக; மோனகுரு உறுதிபெறுமாறு அளித்தருளிய மௌனம் நமக்கு எப்பொழுதும் உறுதுணையாகும்; உணர்ந்து கொள்வாயாக.

(17)
நாற்றச் சடலத்தை ஒன்பது வாசல் நடைமனையைச்
சோற்றுப் பசையினை மும்மல பாண்டத் தொடக்கறையை
ஆற்றுப் பெருக்கன்ன கன்மப் பெருக்கை அடர்கிருமிச்
சேறறைத் துணையென்ற நாய்க்குமுண் டோகதி சேர்வதுவே.
    (பொ - ள்.) தீ நாற்றம் வீசும் இவ்வுடம்பினை, ஒன்பது தொளைகளோடு கூடிய நடமாடும் மனையினை, சோற்றாலாகிய பசையுடைப் பொருளை, ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலக்கலமாகிய தொடக்கினையுடைய அறையினை, ஆற்றுப்பெருக்குப்போன்று அளவின்றி வரும் இருவினைப்பெருக்கினை, நெருங்கி நெளியும் புழுநிறை சேற்றினை, நீங்காத் துணை என்று தூங்கிக்கிடக்கும் நாய்போன்ற எளியேனுக்கும் சிவநிலை பெறும் பெரும் பேறுண்டாமோ?

(18)
பொய்யா ருலக நிலையல்ல கானற் புனலெனவே
மெய்யா அறிந்தென்ன என்னால் இதனை விடப்படுமோ
கையால் மவுனந் தெரிந்தேகல் லால்நிழற் கண்ணிருந்த
ஐயாஅப் பாஎன் அரசேமுக் கண்ணுடை ஆரமுதே.
    (பொ - ள்.) நிலையாமையினையே நிலையாகவுடைய பொய்நிறைந்த இவ்வுலகம் கானல் நீர்போல் நிலையில்லாதது என்று மெய்யாகவுணர்ந்தும், அதனால் விளையும் பயன் யாது? பெருமயக்கிறகு உட்பட்ட அடியேனால் இவ்வுலக வாழ்வு விடப்படுமோ? அறிவடையாளக் (சின் முத்திரை) கையால் மௌன நிலையினை யோர்ந்து கல்லாலநீழலின் கண் வீற்றிருந்தருளிய அழகு நிறைந்த முதல்வனே, அடக்கியாளும் அப்பனே, அடியேனுக்குரிய வேந்தனே, மூன்று திருக்கண்களையுடைய பேரின்பப் பேரமிழ்தே!

     (வி - ம்.) பிணிக்கப்பட்டுச் சிறைப்பட்டு வருந்து மொருவன் தன் பிணியினை உணர்ந்தானாயினும் அப் பிணியாகிய கட்டினையறுத்தல் அவனால் முடியாது; பிறனொருவனால் ஆவது போன்று மாயை மயக்கினின்று விடுவிப்பதும் முழு முதல்வன் ஒருவனாலேயே ஆம் என்பதாம்.

(19)