பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

448
"அருவுருவந் தானறிதல் ஆயிழையாய் ஆன்மா
 அருவுருவ மன்றாகு முண்மை - அருவுருவாய்த்
 தோன்றியுட னில்லாது தோன்றாது நில்லாது
 தோன்றன் மலர்மணம்போற் றொக்கு."
- சிவஞானபோதம், 7, 3 - 1.
    ஆயிழை - நுண்ணியநூல். ஆய்தல் - நுணுகுதல்.

(59)
 
நேரிசை வெண்பா
உடல்பொய் யுறவாயின் உண்மையுற வாகக்
கடவாரார் தண்ணருளே கண்டாய் - திடமுடனே
உற்றுப்பார் மோனன் ஒருசொல்லே உண்மைநன்றாய்ப்
பற்றிப்பார் மற்றவெல்லாம் பாழ்.
     (பொ - ள்.) (தொன்மை மலப்பிணிப்பாம் மூல நோயை ஆருயிர்களினின்றும் அவ்வாருயிர்களைக் கொண்டே விடுவித்தற்பொருட்டுப் பெருந்தண்ணளி வாய்ந்த சிவபெருமான் தொன்மையேயுள்ள வினை மாயைகளினின்றும் முறையே வினைத் தன்மையினையும், உடலுறுப்பு உலகம் உண்பொருள்களையும் படைத்து அவ்வுயிர்களுடன் பொருத்தியருளினன். இதுவே படைப்பு. இது நல்ல ஆசான் ஒருவன் மாணவர்களை அறியாமையினின்றும் நீக்கி அவர்தம் அறிவினை விளக்குவித்தற்கு அம் மாணவர்களைக் கொண்டடே கற்கச்செய்து அவ்விரண்டினையும் கை கூடச் செய்துகொள்ளுதற்குத் துணை நிற்பதோடும் ஒக்கும். மேலும் வறுமையுடையார், பசியுடையார், நோயுடையார் முதலியோர்கட்கு அவரவர்கட்கு வேண்டுவன அவரவரே முயன்று தேடிப்பெற்றுக் கொள்ளக் கண்ணோட்டமுடைய "தமக்கென முயலாநோன்றாட், பிறர்க்கென முயலுந ருண்மை" காட்டும் பெற்றிவாய்ந்து துணை நிற்கும் பெரியவர் செய்கையோடும் ஒக்கும்.) மல நீக்கத்திற்கும் நல நோக்கத்திற்கும் துணை நிற்கும்படி முதல்வனாற் படைத்தளிக்கப்பட்ட மாயாகாரியமாகிய இவ்வுடலும் நிலையில்லாத பொய்யுறவாகும்; அப்படியானால் நிலைத்த உண்மையான உறவாக நீங்காத் துணைநிற்பார் யாவர்? அத்தன்மைவாய்ந்த திருவருளே அனைவர்கட்கும் நினைவரிய உண்மைத்துணையாகும் கண்டாய். உறுதியாகக் காதல் கொண்டு உள்ளத்தின்கண் உற்றுநோக்குவாயாக. மோனகுருவானவர் சொல்லியருளிய 'சிவ' என்னும் செந்தமிழ்த் தனிமந்திரமாம் ஒரு மொழியே மாறாவுண்மையாம்; அதனை நன்றாகப் பற்றிப் பார்ப்பாயாக. மற்றவை யனைத்தும் தோன்றியொடுங்குந் தன்மைவாய்ந்த நிலையில்லாத பாழாம்.