(பொ - ள்.) விளக்க விளங்கும் அறிவுடைப் பொருள்களாகிய அடிமையாம் ஆருயிர்களும், இயக்க இயங்கும் அறிவில்லாத பொருள்களாகிய உடைமையாம் மாயாகாரியப் பொருள்களும் விழுமியமுழு முதல்வனாம் சிவபெருமானின் திருவருட்டுணையின் இயக்கத்தினாலேயே விளக்க முற்றியங்குகின்றன. (அம்முறை பற்றி இவ்விரண்டும் சிவத்தை விடவேறில்லை யென்றோதப்பட்டன.) அதனால் அவை சிவத்தைவிட வேறில்லை யென்று, என்றும் பொன்றா நித்தியனாகிய தனிமுதற்குருவின் பெருந்தண்ணளியால் தூய நன்னிலையைப் பெற்றுள்ளோம்; அப்பேற்றால் நெஞ்சமே, எல்லையில்லாப் பெரும்பிறவிப் பெருங்கடற்றுன்பம் வந்துபொருந்தாவண்ணம், மோனக் கலையெனப்படும் உரையற்ற உயர்வற உயர்ந்த ஒருநிலையினைக் கற்றுக் கைவரப் பெற்றோம்.
(83)
கொச்சகக் கலிப்பா
ஏசற்ற அந்நிலையே எந்தைபரி பூரணமாய் | மாசற்ற ஆனந்த வாரி வழங்கிடுமே | ஊசற் சுழல்போல் உலகநெறி வாதனையால் | பாசத்துட் செல்லாதே பல்காலும் பாழ்நெஞ்சே. |