பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

486

1. புறப்புறம்: 1. உலகாயதர், 2. மாத்தியமிகர், 3. யோகாசாரர், 4. சௌத்திராந்திகர், 5. வைபாடிகர், 6. ஆருகதர்.

2. புறம்: 1. தருக்கம், 2. மீமாஞ்சை, 3. ஏகான்மவாதம், 4. சாங்கியம்,5. யோகமதம், 6. பாஞ்சராத்திரமதம்.

3. அகப்புறம்: 1. பாசுபதம், 2. மாவிரதம், 3. காபாலம், 4. வாமம், 5. வைரவம், 6. ஐக்கியவாத சைவம்.

4. அகம்: 1. பேதவாதி, 2. சிவசமவாதி, 3. சங்கிராந்தவாதி, 4. ஈசுர அவிகாரவாதி, 5. நிமித்தகாரணபரிணாமவாதி, 6. சைவ

    வாதி.

    இவற்றின் விரிவுகளைச் செந்தமிழ்ச் சிவஞான போதச் செழும் பொருள் நூலுக்கு மாதவச் சிவஞான முனிவரனார் ஆக்கியருளிய பேருரையின்கண் காண்க.

(2)
காகம் உறவு கலந்துண்ணக் கண்டீர் அகண்டா காரசிவ
போக மெனும்பே ரின்பவெள்ளம் பொங்கித்ததும்பிப் பூரணமாய்
ஏக வுருவாய்க் கிடக்குதையோ இன்புற் றிடநாம் இனிஎடுத்த
தேகம் விழுமுன் புசிப்பதற்குச் சேர வாருஞ் சகத்தீரே.
     (பொ - ள்.) (மக்கள் எங்ஙனம் வாழ்தல் வேண்டும் என்னும் மெய்ம்மையினை நூன்முறையானுணர்த்தியருளியது மட்டுமன்றிச் சிற்றுயிர்களின் வாழ்க்கை வழியாகவும் சிவபெருமான் உணர்த்தியருளு கின்றனன். அவற்றுள் ஒன்று.) காகமானவை மக்கள் கரைந்து தமக்கென வைக்கப்பட்ட சிறிய அளவு உணவையும் தாமும் "காகா" எனக் கரைந்து 1 தம் உறவுகளை அழைத்துக் கலந்துண்ணு முறையினை நாளும் காண்கின்றோம்; அதுபோல் எங்கணும் நீக்கமற நிறைந்து நின்றருள்கின்ற சிவனுகர்வென்னும் மாறிலாப் பேரின்பப் பெருவெள்ளம் நனி மிகப் பொங்கி வழிந்து முழுநிறைவாய், ஒருவடிவாய், பொதுவாய்க் கிடக்கின்றது; அந்தோ! திருவருளால் நாம் அதை நுகர்ந்து பேரின்பம் எய்திடக் கிடைத்தற்கரிதாய்க் கிடைத்துள்ள இம் மானிடயாக்கை இறந்துவிடுவதன் முன் உலகவரே சேர வருவீராக.

(3)
 
கட்டளைக் கலிப்பா
எடுத்த தேகம் பொருளாவி மூன்றும்நீ
    எனக்கொன் றில்லை எனமோன நன்னெறி
கொடுத்த போது கொடுத்ததன் றோபினுங்
    குளறி நானென்று கூத்தாட மாயையை
 
 1. 
'காக்கை' திருக்குறள், 527.