புத்திநெறி யாகஉனைப் போற்றிப் பலகாலும் | முத்திநெறி வேண்டாத மூடனேன் ஆகெடுவேன் | சித்திநெறிக் கென்கடவேன் சீரடியார்க் கேவல்செயும் | பத்திநெறிக் கேனும்முகம் பார்நீ பராபரமே. |
(பொ - ள்.) அறிவின் வழியாக உன் திருவடியினைப் போற்றுதல் புரிந்து பல நாளும் வீடுபேற்று மெய்ந்நெறியினை வேட்கையுற்று விரும்புதல் செய்யாத அறியாமையான் மூடப்பட்ட அடியேன் ஐயோ! கெட்டொழிவேன்; அகத்தவ நிலைப்பேற்றினுக்கு எங்ஙனம் தகுதியுடையவன் ஆவேன்; நின்னுடைய திருவடிக் காதல் நீங்காத வழிவழிச் சிறந்த மெய்யடியார்கட்கு விடாத முறையாகத் திருத்தொண்டு புரியும் பத்தி நெறியிலேனும் அடியேன் புகுமாறு திருக்கடைக்கணோக்கம் செய்தருளி எளியேன் முகம்பார்த்து இரங்குவாயாக.
(9)
கண்டறியேன் கேட்டறியேன் காட்டும்நினை யேஇதயங் | கொண்டறியேன் முத்தி குறிக்குந் தரமுமுண்டோ | தொண்டறியாப் பேதைமையேன் சொல்லேன்நின் தொன்மை | பண்டறிவாய் நீயே பகராய் பராபரமே. [யெலாம் |
(பொ - ள்.) திருவருளால் அடியேன் நின் திருவுருவச்சிறப்பினைக் கண்ணாரக் கண்டறியேன்; நின் பெரும் திருவருட்பண்பு எட்டின் பெருமையெல்லாம் நல்லார் வாயிலாகக் கேட்டும் அறிந்திலேன்; யாண்டும் நீக்கமற நிறைந்திருக்கும் நின் அளப்பரும் முழுமுதற்றன்மையினை உள்ளத்தின்கண் வைத்து ஓவாது உள்குதலாகிய தியான நிலையினையுங் கைக்கொண்டிலேன். அதனால் எளியேனுக்கு வீடுபேற்றினை விரும்பும் தகுதியு முண்டாமோ? திருத்தொண்டு புரியும் அறிவறியாப் பேதைமையேன், முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளே, உன் பெருமையினையே, சொல்லுகின்றிலேன்; இதனை நீ முன்னமே அறிந்தருள்வாய்; மேலான தனிமுதலே.
(10)
தன்னை அறியத் தனதருளால் தானுணர்த்தும் | மன்னைப் பொருளெனவே வாழாமற் பாழ்நெஞ்சே | பொன்னைப் புவியைமடப் பூவையரை மெய்யெனவே | என்னைக் கவர்ந்திழுத்திட் டென்னபலன் கண்டாயே. |
(பொ - ள்.) முழு முதல்வனாகிய சிவபெருமானை அவன் திருவருளால் உணர்ந்து, அம் முதல்வனை அழியா மெய்ப்பொருளென்று உட்கொண்டு வாழாமல் வீணாய்க் கழியும் நெஞ்சே! நிலையில்லா அழியுந்தன்மைத்தாய மாயாகாரியப் பொன்னையும், இந் நிலவுலகத்தையும் பொன்னை மிகுதியாக விரும்பும் பூவை போன்ற பெண்பாலாரையும் நிலையான பொருள்களென்று அடியேனைப் பற்றி இழுத்து, நுகர்ந்த பயன் யாது? (ஒன்றுமில்லை யென்பதாம்.)
(1)