பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

496

பேய்ப்பிறப்பினுங் கடைப்பட்ட பிறப்பினனாகிப் பிதற்றிக்கொண்டு திரிதல் நன்றாமோ? செந்தழலில் உருகும் மெழுகுபோன்று உருகி நொந்தேன்; தெளிவறிவு இல்லாத சிறுமையனானேன்; காலங்கள் பயனின்றிக் கழிந்தன. இனிமேல் அடியேனால் நொடிப் பொழுதும் பொறுக்க முடியாது. (ஆட்கொண்டருளுதல் வேண்டும்.) நிறை பேரின்பப் பெருவாழ்வே!

(7)
பதியுண்டு நிதியுண்டு புத்திரர்கள் மித்திரர்கள்
    பக்கமுண் டெக்காலமும்
  பவிசுண்டு தவிசுண்டு திட்டாந்த மாகயம
    படரெனுந் திமிர மணுகாக்
கதியுண்டு ஞானமாங் கதிருண்டு சதிருண்டு
    காயசித் திகளுமுண்டு
  கறையுண்ட கண்டர்பால் அம்மைநின் தாளில்
    கருத்தொன்றும் உண்டாகுமேல்
நதியுண்ட கடலெனச் சமயத்தை யுண்டபர
    ஞானஆ னந்தஒளியே
  நாதாந்த ரூபமே வேதாந்த மோனமே
    நானெனும் அகந்தைதீர்த்தென்
மதியுண்ட மதியான மதிவதன வல்லியே
    மதுசூ தனன்தங்கையே
  வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை
    வளர்காத லிப்பெண்உமையே.
     (பொ - ள்.) சமயங்கள் போன்று பலவாகக் காணப்படும் யாறுகள் பலவற்றையும் தன்னுள் அடக்கிக்கொண்டு தானாந விளங்கும் பெருங்கடலென்று சொல்லும்படி, வாலறிவு வண்ணமாகிய மாறாப் பேரின்பம் மன்னு பெருஞ்சுடரே! ஓசையெனப்படும் முப்பத்தாறாம் மெய்யாகிய நாததத்துவத்துக்கும் அப்பாற்பட்ட சொல்லொணாவடிவே, மறைமுடிவாகிய மோனத்திருவே, யான் எனதென்னும் அகந்தையை அறுத்தருளி, அடியேனுடைய சிற்றறிவினை நின் பேரறிவின்கண் அடங்கச் செய்துள்ள அறிவான முழுநிலாப் போன்ற முகம் வாய்ந்த கொடியே, மதுசூதனன் தங்கையே, மலையரையனுக்கு இருகண்மணி போன்று திருத்தோற்ற மளித்தருளிப், பனிமலையினிடமாக வளர்ந்தருளிய காதலிப் பெண் உமையே! திருநீலகண்டத்தையுடைய சிவபெருமான்றன் இடப்பக்கத்தமர்ந்தருளும் உலகீன்ற அன்னையே! நின்திருவடியில் அடியேனுக்கு உண்மைக்கருத்து உண்டாகுமேயானால் நின் திருவருளால் நல்வாழ்வுக்கு வேண்டும் வாய்ப்பான இடமுண்டாகும்;