றெண்ணாத படிக்கிரங்கித் தானாகச் செய்தருளும் | இறையே உன்றன் | தண்ணாருஞ் சாந்தஅருள் தனைநினைந்து கரமலர்கள் | தலைமேற் கொள்வாம். |
(பொ - ள்.) 'விண்ணாதி . . . ஆனந்தக்கடலாய்' - விண்முதலாகச் சொல்லப்படும் பூதங்களெல்லாம் தன்னகத்தே அடங்குமாறு செய்தருளி, (ஒடுங்கிய நிலையில் ஏதும் வெளிப்படாமையால்) வெறு வெளியாய், (அந்நிலையில்) தன் திருவருளால் திருவடியுணர்வு கொண்டு அகக்கண் நிறைவாகக் கண்ட மெய்யன்பர் உணர்வினூடு பேரின்பப் பெருங்கடலாய்;
'வேறொன் . . . தலைமேற் கொள்வாம்' - (திருவடியுணர்வு) கைவந்த அம்மெய்யடியார்கள் வேறொன்றையும் எண்ணாதபடி அவர்களிடத்துப் பெருந்தண்ணளியாகிய கிருபா கடாட்சத்தினைச் செய்தருளித்தானாகவே அவர்களைச் செய்தருளும் முதல்வனே, உன்னுடைய அந்தண்மையாகிய குளிர்ச்சி நிறைந்த அமைதியான திருவருளை நினைந்து கைகளை உச்சிமேற் குவித்துத் தொழுதலை மேற்கொள்வாம்.
(வி - ம்.) சாந்தம் - அமைதி. பூதங்களைத் தன்னகத்திலடக்குத லென்பது, முதல்வன் தன் திருவருளாணையாகிய அறிவாற்றலால் உன் முகமாகிய சங்கற்பத்தின்வழி அவ்வவற்றின் காரணங்களில் ஒடுங்குமாறு செய்வித்தருள்வதாம். இனம் இனத்தோடிணையுமேயன்றி வேறொன்றுடனும் இணைவதின்று. அறிவுடைய உயிர் பேரறிவுடைய முதல்வனோடிணையும். அறிவில்லாத மாயாகாரிய மெய்கள் அறிவில்லாத மாயையில்தான் ஒடுங்கும். முதல்வனகத்துப் பூதம் ஒடுங்கும் என்பது, அவனருளால் காரணமாயையில் ஒடுங்கும் என்பதே தெளிவு. எல்லாம் திருவருள்வெளியில் ஒடுங்கும். திருவருள் சிவபெருமான் கண் ஒடுங்கும் இவ்வுண்மை வரும் "கண்ணி நார்நறுங் கொன்றை" எனத் தொடங்கும் புறநானூற்றுக் கடவுள் வாழ்த்துப்பாட்டால் உணரலாம். மெய்கள் - தத்துவங்கள்.
அதனுள்,
| "பெண்ணுரு வொருதிற னாகின் றவ்வுருத் |
| தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்" |
(தன்னுள்ளடக்கிக் கரக்கு மென்பதற்கு அவ்வடிவுதான் எல்லாப் பொருளையும் தன்னுள்ளேயடக்கி, அவ்விறைவன் கூற்றிலே மறையினும் மறையுமென்று உரைப்பினும் அமையும்.)
பூதங்கள் ஒடுங்கும் முறை: வான முதலிய ஐம்பெரும் பூதங்களும் அவற்றின் தோற்றத்திற்கு முதற்காரணமாகிய ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் என்னும் தன்மாத்திரைகள் ஐந்தினும் முறையே ஒடுங்கும், தன் மாத்திரைகள், எழுச்சியாகிய அகங்காரத்திலொடுங்கும். அகங்காரம் இறுப்பாகிய புத்தியின்கண் ஒடுங்கும். புத்தி குணமெய் (தத்துவம்) யில்