மரத்து நீழலில் வீற்றிருந்தருளும் அன்பறிவு ஆற்றல்களின் அக அடையாளமாகவும் ஞாயிறு திங்கள் தீ என்னும் ஒளிகளின் புற அடையாளமாகவும் விளங்கும் மூன்று திருக்கண்களையுடைய கனியே நின் திருவருளால் காண்பேனோ?
(7)
பெற்றவட்கே தெரியுமந்த வருத்தம் பிள்ளை | பெறாப்பேதை யறிவாளோ பேரா னந்தம் | உற்றவர்க்கே கண்ணீர்கம் பலையுண் டாகும் | உறாதவரே கல்நெஞ்ச முடைய ராவார். |
(பொ - ள்.) (அருந்தவ மிருந்து முந்நூறு நாட்சுமந்து மகவைப்) பெற்றவட்கே அப் பிள்ளைப் பேற்றின் வருத்தம் பட்டறிவாக உணர வரும்; அங்ஙனம் பிள்ளைபெறாத பேதைப்பெண் அறிவளோ? திருவடிப்பெரும் பேரின்பத்தினைத் திருவருளால் பொருந்தி நுகர்ந்தவர்க்கே (அகத்தினை வெளிப்படுத்தும் புறவடையாளமாகிய) கண்ணீரும் மெய்ந்நடுக்கமும் தானாகவே உண்டாகும். திருவடிப்பேறு பெறாதவர் வன்மைமிக்க தன்னெஞ்சமுடையராவர்; கம்பலை - நடுக்கம். 'அகத்தின் அழகுமுகத்திற்றெரியும்" என்பது இங்கு நினைவு கூர்க. பட்டறிவு - அனுபவம்.
(1)
ஆவாவென் றழுதுதொழுங் கைய ராகி | அப்பனே ஆனந்த அடிக ளேநீ | வாவாவென் றவர்க்கருளுங் கருணை எந்தாய் | வன்னெஞ்சர்க் கிரங்குவதெவ் வாறு நீயே. |
(பொ - ள்.) ஐயோவென்று அழுது கைகூப்பித்தொழும் ஒழுக்க முடையவராகி அப்பனே பேரின்பம் விளைவிக்கும் அடிகளே நீ வாவா வென்று அன்புடன் அழைத்தவர்கட்குத் திருவருள் புரிகின்ற தண்ணளியினையுடைய எம்மருமைத் தந்தையே, கற்போன்ற வன்மை பொருந்திய நெஞ்சினையுடையார்க்கு நீ இரங்கியருள்வது எவ்வாறு? ஆவா-ஐயோ. கையர் - ஒழுக்கமுடையவர். அடிகள் - கடவுள். கருணை - தண்ணளி.
(2)
நீயேஇங் கெளிஙேற்குந் தாக மோக | நினைவூடே நின்றுணர்த்தி நிகழ்த்த லாலே | பேயேற்குந் தனக்கெனவோர் அன்பு முண்டோ | பெம்மானே இன்னமன்பு பெருகப் பாராய். |
(பொ - ள்.) தேவரீரே இவ்விடத்து அறிவிலா எளியேனுக்கு அடியேன் நினைவின்கண் நின்று வேட்கையினையும், மயக்கத்தினையும் உணர்த்தியருள்பவன் நீயாதலால், அப் பொருள்கள்பாற் செல்லும் அச் செயல்களும் நீயே ஆவை. (ஆதலால்) பேய் போன்ற எனக்கு