பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

513

     (பொ - ள்.) தெரியும்படியாக அடியேன் உணர்வினுள்ளே ஒளி விட்டுக்கொண்டு விளங்குகின்ற திருமாமறை முதலே, மூதறிவின் மூவா வித்தே, மாசற்ற வாழ்வே, குற்றமற்ற எண்குணமெய்ப் பொருளே, அடியேனை யாண்டும் விட்டு நீங்காது நின்றருளும் நெற்றிக்கண்ணனே, முப்பத்தாறாம் மெய்யெனப்படும் ஓசையாகிய நாததத்துவத்துக்கும் அப்பாற்பட்டுத் திகழ்வதாகிப் பேரின்பப் பெரும் பொருளாய் உணர்வினில் காட்சிப்படும் ஒப்பில் பெரும் பொருளே!

(10)
நாதமே நாதாந்த வெளியே சுத்த
    ஞாதுருவே ஞானமே ஞேய மேநல்
வேதமே வேதமுடி வான மோன
    வித்தேயிங் கென்னையினி விட்டி டாதே.
     (பொ - ள்.) ஓசை வடிவே, ஓசைக்கு அப்பாலாய்க் காணப்படும் அறிவாற்றலாம் திருவருள் வெளியே. தூயவுயிருக்குளிருக்கும் உயிருணர்வுப் பொருளே, காட்டக் காணும் தன்மை வாய்ந்த உயிரே! காணுமுணர்வே, காணப்படும் பேரின்பக் காட்சியே, நல்ல நான் மறையே! மறைமுடிவாகிய மோன நிலை முதலே, இங்கே அடியேனை இனி, கைவிட்டுவிடாது காத்தருள்வாயாக.

(11)
கல்லாலின் நீழல்தனில் ஒருநால் வர்க்குங்
    கடவுள்நீ உணர்த்துவதுங் கைகாட் டென்றால்
சொல்லாலே சொலப்படுமோ சொல்லுந் தன்மை
    துரும்புபற்றிக் கடல்கடக்குந் துணிபே யன்றோ.
     (பொ - ள்.) கல்லால மரத்து நீழலில் வீற்றிருந்தருளி ஒப்பில்லாத சனகர், சனற்குமாரர், சனந்தனர், சனாதனர் என்று சொல்லப்படும் நால்வர்க்கும் முதல்வனாகிய நீ உண்மையாம் முத்திறப் புணர்ப்பினை உணர்த்தியருளியதும் அறிவடையாளக் கைப்புணர்ப்பென்றால், வாய்ச் சொல்லால் சொல்லப்படுமோ? அவ் வுண்மையைச் சொல்லாலுணர்த்தல் கூடுமென ஒருவர் உன்னின்? (அந் நினைவு) அறியாதானொருவன் சிறு துரும்பினைப் புணை எனப் பற்றிப் பெருங்கடலைக் கடக்கத் துணியும் துணிபாகும்.

     (வி - ம்.) அரிய வுணவினை ஆக்கலும், அமைத்தலும், அருந்தலும் சொல்லாலும் செயலாலும் விளக்கக் கூடியன; ஆனால் உண்டதனால் பசித்துன்பம் அகன்றதும் சுவையின்பந் துய்த்ததும், நலமுற்றிருப்பதுந் தாமே உணர்வதன்றிச் சொல்லால் உரைக்கப்படுமோ? படாதாம். இது போன்றதே பேரின்பமும்.

(1)