நின் திருவடிப் பேரின்பம் வேண்டிப் பெறாது வீணாய் அலந்து நொந்தேன். யான் - அகப்பற்று. எனது - புறப்பற்று. யான் - அகங்காரம். எனது -மமகாரம்.
(20)
என்புருகி நெஞ்சம் இளகிக் கரைந்துகரைந்(து) | அன்புருவாய் நிற்க அலந்தேன் பராபரமே. |
(பொ - ள்.) எலும்பு நெக்குவிட்டுருகி, மனங்கரைந்து உருகி இறவாத இன்ப அன்புருவாய் நிற்கப் பெருவேட்கையுற்றேன். (அது கிடைக்கப் பெறாமையால்) துன்புற்றேன்.
(21)
சுத்த அறிவாய்ச் சுகம்பொருந்தின் அல்லால்என் | சித்தந் தெளியாதென் செய்வேன் பராபரமே. |
(பொ - ள்.) மாசற்ற முற்றுணர்வு நேர்காட்டாக அடியேன் அறிவு மாசகன்று தூயதாய்ப் பேரின்பம் புணர்ந்து இருந்தாலல்லாமல் எளியேன் மனம் தெளிவடையாது. என் செய்குவேன்?
(22)
மாறா அனுபூதி வாய்க்கின் அல்லால் என்மயக்கந் | தேறாதென் செய்வேன் சிவமே பராபரமே. |
(பொ - ள்.) வேறுபடாத சிவன்நுகர்வு வாய்க்கப்பெற்றாலல்லாமல், அடியேன் மயக்கம் தெளிவடையாது; இதற்கு யான் என்ன செய்யக்கடவேன்? சிவபெருமானே!
(23)
தாகமறிந் தின்பநிட்டை தாராயேல் ஆகெடுவேன் | தேகம் விழுந்திடின்என் செய்வேன் பராபரமே. |
(பொ - ள்.) அடியேனுடைய நீங்கா வேட்கையினைத் தேவரீர் அறிந்து பேரின்பப் பிறழா நிலையினைத் தந்தருளாயாயின் ஐயோ யான் கெட்டொழிவேன்; எடுத்த இவ்வுடம்பு கீழே விழுந்திடின் எளியேன் என் செய்வேன்?
(24)
அப்பாஎன் எய்ப்பில் வைப்பே ஆற்றுகிலேன்போற்றிஎன்று | செப்புவதல் லால்வேறென் செய்வேன் பராபரமே. |
(பொ - ள்.) ஏழையேனுக்குற்ற எழிற்றந்தையே, இளைத்தவிடத்துதவும் இறவாத வைப்பே, (பிறப்புத்துன்பத்தினை) ஒரு சிறிதும் பொறுக்க முடியாது; போற்றியென்று புகழ்ந்து வழிபடுவதல்லால், வேறு என்ன செய்யவல்லேன் யான்?
(25)
உற்றறியும் என்னறிவும் உட்கருவி போற்சவிமாண் | டற்றும்இன்பந் தந்திலையே ஐயா பராபரமே. |
(பொ - ள்.) பொறிவழியாகப் புலன்களைப் பொருந்தி அறியும் அடியேன் அறிவும். உட்கருவியாகிய மன முதலிய அந்தக்கரணங்களும் ஒளி மழுங்கித் தகுதியற்ற இடத்தும், ஐயனே நின் திருவடி இன்பப் பேற்றினைத் தந்தருளினாயில்லையே! சவி - ஒளி.
(26)