(பொ - ள்.) அடியேனுடைய மனநிலையினைத் தேவரீர் அறிந்தருள்வீர்: அடியேன் துன்பப்படுதலையும் உணர்ந்தருள்வீர்; ஏழையேனைத் தள்ளிவிடுவீராயின் யான் மிகவும் வருந்துவேன்.
(33)
கன்றினுக்குச் சேதா கனிந்திரங்கல் போலஎனக் | கென்றிரங்கு வாய்கருணை எந்தாய் பராபரமே. |
(பொ - ள்.) தானீன்ற கன்றினுக்கு ஈன்றணிய தாய்ப்பசு இரக்கங்கொண்டு வேண்டுவன புரிவது போன்று, பெருந்தண்ணளியுடைய எந்தையே; அடியேன்மாட்டு நீ எந்நாளில் இரங்குதல் செய்தருள்வை?
(34)
எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணிஎண்ணி ஏழைநெஞ்சம் | புண்ணாகச் செய்ததினிப் போதும் பராபரமே. |
(பொ - ள்.) கிடைத்தற்கரிய பலவற்றையும் இடையறாது எண்ணி எண்ணி அடியேனுடைய நெஞ்சம், புண்படச் செய்தது; இனிப் போதும்.
(35)
ஆழித் துரும்பெனவே அங்குமிங்கும் உன்னடிமை | பாழில் திரிவதென்ன பாவம் பராபரமே. |
(பொ - ள்.) தேவரீருடைய அடிமையாகிய யான் பெருங்கடலிற்பட்ட சிறு துரும்பென்று சொல்லும்படி அளவில்லாத பிறவிகளில் வீணாயலைந்து திரிவது என்ன பயன் ஆகும்?
(36)
கற்றஅறி வால்உனைநான் கண்டவன்போற் கூத்தாடில் | குற்றமென்றென் நெஞ்சே கொதிக்கும் பராபரமே. |
(பொ - ள்.) உலகியற் கல்வியறிவால் தேவரீரைக் கண்டுணர்ந்தவன் போல நடித்தால், அது பெரிய குற்றமாகும். அக் குற்றத்திற்கு எளியேன் மனமே மிகவும் வருந்தும்.
(37)
ஐயோ உனைக்காண்பான் ஆசைகொண்ட தத்தனையும் | பொய்யோ வெளியாப் புகலாய் பராபரமே. |
(பொ - ள்.) அந்தோ! நின் திருவடியினைக் காணுதற் பொருட்டுப் பெரு வேட்கை கொண்டது முழுவதும் பொய்யாகப் போகுமோ? வெளிப்படையாகச் சொல்லியருளுதல் வேண்டும்.
(38)
துன்பக்கண் ணீரில் துளைந்தேற்குன் ஆனந்த | இன்பக்கண் ணீர்வருவ தெந்நாள் பராபரமே. |
(பொ - ள்.) பிறவிப் பெருந்துன்பக் கண்ணீரில் மூழ்கின யான் அது நீங்கி நின்பேரின்பம் உற்று இன்பக்கண்ணீர் பெருக்குவது எந்நாளில்?
(39)
வஞ்சனையும் பொய்யும்உள்ளே வைத்தழுக்கா றாயுளறும் | நெஞ்சனுக்கும் உண்டோ நெறிதான் பராபரமே. |