பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

56

     இறைவன் இயங்கு திணைக்கண்ணும், நிலைத்திணைக் கண்ணும், பிறவற்றின்கண்ணும் அவற்றின் தன்மையாய் நிற்குமாறு எல்லார்க்கும் ஒப்பமுடிந்தாற்போல அகரமும் உயிர்க்கண்ணும் தனி மெய்க்கண்ணும் கலந்து அவற்றின் தன்மையாயே நிற்குமென்பது சான்றோர்க்கெல்லாம் ஒப்பமுடிந்தது. "அகரமுதல" என்னுங் குறளான் அகரமாகிய முதலையுடைய எழுத்துக்களெல்லாம், அதுபோல இறைவனாகிய முதலையுடைத்து உலகமென வள்ளுவனார் உவமை கூறியவாற்றானுங் கண்ணன் எழுத்துக்களில் அகரமாகின்றேன் யானே எனக் கூறியவாற்றானும் பிற நூல்களானும் உணர்க."                                - தொல். எழுத்து - 46. மெய்யி - உரை.

"சீர்கொளிறை யொன் றுண்டத் தெய்வநீ யென்றொப்பாற்
 சோர்விலடை யாற்றெளிந்தோஞ் சோமேசா - ஓரின்
 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
 பகவன் முதற்றே உலகு."
- சோமேசர் முதுமொழிவெண்பா, 1.
     ஆதி - ஆதிசத்தி. நடப்பாற்றல்; மறைப்பாற்றல்; திரோதனசத்தி. பகவன் - மாதிருக்கும் பாதியனாகிய சிவபெருமான்.

"ஒன்றென மறைக ளெல்லாம் உரைத்திட உயிர்கள் ஒன்றி
 நின்றனன் என்று பன்மை நிகழ்த்துவ தென்னை யென்னின்
 அன்றவை பதிதான் ஒன்றென் றறையும் அக் கரங்கள் தோறும்
 சென்றிடும் அகரம் 1போல நின்றனன் சிவனுஞ் சேர்ந்தே."
- சிவஞானசித்தியார், 2, 1 - 1.
     முதல்வன் எல்லாமாகி நிற்கும் இயல்பு; உடலும் உயிரும்போலவும், பாலும் நீரும் போலவும், ஞாயிறுந் திங்களும் போலவும் கலப்பாம் உலகத்தோடு இறைவன் நிற்பான் என்று கூறுவதாகும். உயிரும், பாலும், ஞாயிறும் ஒன்றாகாது பொருட்டன்மையில் வேறாய் நிற்பன. அதனால் 'அல்லவாகி' என்னும் உண்மை பெறப்படும். இவ்வுண்மையினை வரும் செந்தமிழ்த் திருமாமறையானுணர்க :

"பற்றுமாகி வானுளோர்க்குப் பல்கதிரோன் மதியார்
 எற்றுநீர் தீக் காலுமேலை விண்ணிய மானனோடு
 மற்றுமாதோர் பல்லுயிராய் மாலயனும் மறைகள்
 முற்றுமாகி வேறுமானான் மேய்து முதுகுன்றே."
- 1, 53 -2.
(12)
 
 1. 
ஒன்றென்ற. சிவஞானபோதம், 2, 1 - 2.