அந்தமுடன் ஆதி அளவாமல் என்னறிவில் | சுந்தரவான் சோதி துலங்குமோ பைங்கிளியே. |
(பொ - ள்) பைங்கிளியே! முடிவும் முதலும் இவ்வளவின என அளவிடுதற்கு முடியாத பேரளவில் காணப்படும் அழகிய மேலான அருட்பேரொளி, அடியேன் அறிவினிடத்திலே விளங்குமோ? சொல்லுவாயாக. சுகம் - கிளி.
(1)
அகமேவும் அண்ணலுக்கென் அல்லலெல்லாஞ் சொல்லிச் | சுகமான நீபோய்ச் சுகங்கொடுவா பைங்கிளியே. |
(பொ - ள்) அடியேன் உயிர்க்குயிராய் உணர்வினுக்குணர்வாய் உள்ளத்தின் கண் மிக்கோங்கி உறையும் தலைவனுக்கு எளியேன் படும் மருந்துபிறிதில்லாப் பெருந்துன்பங்களை எடுத்துக்கூறி, அவர்தம் திருவடிப் பேரின்பப்பெருந் திருவைப் பெற்றுக்கொண்டு வருவாயாக.
(2)
ஆவிக்குள் ஆவிஎனும் அற்புதனார் சிற்சுகந்தான் | பாவிக்குங் கிட்டுமோ சொல்லாய்நீ பைங்கிளியே. |
(பொ - ள்) உயிர்க்கு உயிராய் உறைந்திருக்கும் வியத்தகு பெருமானார்தம் அறிவுப் பேரின்பம் பாவியாகிய அடியேனுக்குக் கிட்டுமோ? கூறுவாயாக. சுகம் - இன்பம்.
(3)
ஆருமறி யாமல்எனை அந்தரங்க மாகவந்து | சேரும்படி இறைக்குச் செப்பிவா பைங்கிளியே. |
(பொ - ள்) ஒருவரும் அறியாதபடி அடியேனை மிகுந்த மறைவாக வந்து சேரும்படி முழுமுதல்வற்கு மொழிந்து வருவாயாக. அந்தரங்கம் - மறைவு; இரகசியம்.
(4)
ஆறான கண்ணீர்க்கென் அங்கபங்க மானதையுங் | கூறாத தென்னோ குதலைமொழிப் பைங்கிளியே. |
(பொ - ள்) மழலைச் சொல்லைக் கேட்போர் மனமகிழக் கூறும் பசிய கிளியே, அடியேனுடைய கண்ணீரானது ஆறாகப்பெருகி எளியேன் உடம்பெங்கெணும் நனைத்ததையும் என்னுயிர்த் தலைவனிடத்து நீ கூறாதது எதன் பொருட்டோ?
(5)
இன்பருள ஆடையழுக் கேறும்எமக் கண்ணல்சுத்த | அம்பரமாம் ஆடை அளிப்பானோ பைங்கிளியே. |
(பொ - ள்) அழுக்கேறிய ஆடையுடுத்துள்ள அடிமைக்குத், தான் உடுத்துள்ள தூய வானம் போன்ற ஆடையைத் தந்தருள்வனோ? தன் திருவடியின்பத்தைத் தந்தருளுதற் பொருட்டு.