பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

608
காதன்மை கொண்டுள்ளேன். அக் காதலால் ஏற்பட்டுள்ள துன்பம் எளியேன் பொறுக்க முடிகின்றதில்லை.

(38)
 
பாராசை அற்றிறையைப் பற்றறநான் பற்றிநின்ற
பூராய மெல்லாம் புகன்றுவா பைங்கிளியே.
     (பொ - ள்) உலகியற் பற்றுச் சிறிதும் இல்லாமல் திண்மை (வைராக்கியம்) யுடையேனாய்த் தலைவர்தம் திருவடியை ஏனைப் பற்றுக்கள் முற்றும் அற்றகலும்படி எளியேன் பற்றி நிற்கின்ற காதல் தன்மை முழுவதையும் தலைவர்பால் சொல்லி வருவாயாக. பூராயம் - விருப்பம்; காதல்.

(39)
 
பேதைப் பருவத்தே பின்தொடர்ந்தென் பக்குவமுஞ்
சோதித்த அண்ணல்வந்து தோய்வாரோ பைங்கிளியே.
     (பொ - ள்) என்னை யான் அறியாப் பேதைப் பருவத்தே (என் தலைவர்) எளியேனைப் பின்தொடர்ந்து என்னுடைய செவ்வியாகிய பக்குவத்தினையும் ஆய்வுசெய்து உளம் புகுந்த எளியேன் தலைவர் எழுந்தருளி வந்து என்னைத் தழுவியருள்வரோ?

(40)
 
பைம்பயிரை நாடும்உன்போற் பார்பூத்த பைங்கொடிசேர்
செம்பயிரை நாடித் திகைத்தேன்நான் பைங்கிளியே.
     (பொ - ள்) பசுமையான பயிரை நாடுகின்ற பைங்கிளியே, உன்னைப்போல் உலகெலாம் பெறாது பெற்றெடுத்த பசிய அழகிய கொடிபோன்ற இடையினையுடைய உமையம்மையாரைச் சார்ந்த செவ்விய பயிராகிய சிவபெருமானை நாடி எளியேன் திகைத்துள்ளேன்.

(41)
 
பொய்க்கூடு கொண்டு புலம்புவனோ எம்மிறைவர்
மெய்க்கூடு சென்று விளம்பிவா பைங்கிளியே.
     (பொ - ள்) நிலையில்லாத பொய்யாகிய இவ்வுடம்பென்னும் கூட்டினைச் சுமந்து புலம்பித் திரிவேனோ? எம் இறைவராகிய சிவபெருமானின் நிலைத்த திருமுன்னே சென்று இந்நிலையினை விளம்பி வருவாயாக.

(42)
 
பொய்ப்பணிவேண் டேனைப் பொருட்படுத்தி அண்ணலென்பால்
மெய்ப்பணியுந் தந்தொருகால் மேவுவனோ பைங்கிளியே.
     (பொ - ள்) பசியகிளியே! பொய்யாக அல்லது நாடகமாகக்கூட இறைபணி செய்ய விரும்பாத எளியேனை, திருவருளால் பொருளாகத் திருவுள்ளங் கொண்டு தலைவர் அடியேன்பால் உண்மையான நிலைத்த திருப்பணி புரியும் திருவருளையும் தந்து ஆட்கொண்டனர். அப்பெருமான் மீட்டுமொருமுறை வந்து ஏழையேனைக் கலப்பரோ?

(43)
 
மண்ணுறங்கும் விண்ணுறங்கும் மற்றுளஎ லாமுறங்குங்
கண்ணுறங்கேன் எம்மிறைவர் காதலாற் பைங்கிளியே.