(பொ - ள்) அடியேனுடைய நெஞ்சகத்தே மெய்ப்புணர்ப்பாய்க் கலந்திருந்தும், எளியேன் காணாவாறு ஒளித்திருந்து யான் செய்யும் வஞ்சனைகள் அனைத்தையும்1 வள்ளலாகிய என் தலைவன் அறிந்தருளினன். அதனால் ஏழையேன் ஒன்றை மறைத்துக் கூற அடியேனுக்கு வாயுமுண்டோ?
(55)
ஆகத்தை நீக்குமுன்னே ஆவித் துணைவரைநான்
தாகத்தின் வண்ணந் தழுவனோ பைங்கிளியே.
(பொ - ள்) அடியேன் இவ் வுடம்பினின்று நீங்குமுன்னே என் ஆருயிர்க்குத் துணையாகிய தலைவரை எளியேன் காதல் விருப்பத்தின்படி தழுவுவேனோ? ஆகம் - உடம்பு.
(56)
தானே சுபாவந் தலைப்படநின் றான்ஞான
வானோ னவரும் வருவாரோ பைங்கிளியே.
(பொ - ள்) (ஒன்றேயுளது என்னும் ஏகான்மவாத வுணர்வாகிய தற்போத முனைப்பால்) தானே இயல்பென்னும் தன்மை தலைப்பட்டு நின்றால் திருச்சிற்றம்பலம் எனப்படும் சிதாகாய வடிவினனான இறைவன் எளியேன்பால் வந்தருள்வனோ? (வாரான் என்பதாம்.)