(பொ - ள்) மறைமூல மந்திரமாகிய தனித்தமிழ்த் திருவைந்தெழுத்தின் உண்மைப் பொருளான சிவபெருமானைத் திருவருளால் அடியேன் நெஞ்சத்தின்கண் நன்றாகப் பதியவைத்து அதனுடன் இரண்டறக் கலந்து ஒன்றாகி நிற்குநாள் எந்நாளோ?
(13)
அவ்வுயிர்போல் எவ்வுயிரும் ஆனபிரான் தன்னடிமை | எவ்வுயிரு மென்றுபணி யாஞ்செய்வ தெந்நாளோ. |
(பொ - ள்) எல்லா எழுத்துகளையும் இயைந்தியக்குதற் பொருட்டு அகரவுயிர் அவற்றுடன் நீக்கமற நிறைந்து நிற்பது போன்று, அனைத்துயிர்களுடனும் வேறறக் கலந்து நிற்கும் முழு முதல்வனின் அடிமை அவ்வுயிர்கள் எல்லாம் என்னும் மெய்ம்மை யோர்ந்து அவற்றுக்கு நீங்கா அன்புபூண்டு அரும்பணி செய்யுநாள் எந்நாளோ?
(14)
தேசிகர்கோ னான திறன்மவுனி நந்தமக்கு | வாசி கொடுக்க மகிழுநாள் எந்நாளோ. |
(பொ - ள்) குருமுதல்வராய்த் தோன்றியருளிய அருட்டிறன் மிக்க மவுன குருவானவர் நமக்கு அருளிய நினைவொருமை எனப்படும் தாரணை வந்து கைகூடுவ தெந்நாளோ?
(15)
குருலிங்க சங்கமமாக் கொண்ட திருமேனி | அருள்மயமென் றன்புற் றருள்பெறுவ தெந்நாளோ. |
(பொ - ள்) சிவகுருவாகவும், சிவக்கொழுந்தாகவும், சிவனடியாராகவும் காட்சி தந்தருளும் திருக்கோலத் திருமேனிகள் அனைத்தும் திருவருண்மயமே என்று கள்ளமின்றி உள்ளத்துறுதி கொண்டு, மெய்யன்புற்றுப் பணிந்து வழிபாடியற்றித் திருவருள் பெறுநாள் எந்நாளோ?
(16)
சிந்திக்குந் தோறுந் தெவிட்டா அமுதேஎன் | புந்திக்குள் நீதான் பொருந்திடவுங் காண்பேனோ. |
(பொ - ள்) எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் தெவிட்டாத அமிழ்தமாகக் காணப்படும் முதல்வனே. நீ எளியேனுடைய அறிவினுள் வெளிப்படவும் காணப்பெறுவேனோ?
(1)
கேவலத்தில் நான்கிடந்து கீழ்ப்படா தின்பஅருள் | காவலன்பால் ஒன்றிக் கலந்திடவுங் காண்பேனோ. |
(பொ - ள்) மலப்பிணிப்புடன் மட்டும் கிடக்கும் புலம்புநிலையிற் கிடந்து தாழ்வுபடாமல் அடியேனுக்குத் திருவருட் பேரின்பத்தைத் தந்தருளுகின்ற இறைவனிடத்தில் இரண்டறக் கலந்திடவுங் காண்பேனோ?
(2)