எல்லாந் தெரியும் இறைவாஎன் அல்லலெலாஞ் | சொல்லாமுன் நீதான் தொகுத்திரங்கக் காண்பேனோ. |
(பொ - ள்) ஒரு காலத்தே எல்லாவற்றையும் ஒருங்கே இயல்பாக அறிந்துகொள்ளும் விழுமிய முழுமுதல்வனே! அடியேன் படும் துன்பங்களனைத்தையும் எளியேன் நின்திருமுன் விண்ணப்பித்துக்கொள்ளு முன்னே தேவரீராகவே திருவுள்ளங் கொண்டு இரங்கியருளவுங் காணப்பெறுவேனோ?
(33)
அண்டபகி ரண்டம் அனைத்தும் மொருபடித்தாக் | கண்டவர்கள் கண்டதிருக் காட்சியையுங் காண்பேனோ. |
(பொ - ள்) மாயா காரியமாகிய பிண்டமாகிய உடம்பும், அண்டமாகிய உலகமும் பிறவுமெல்லாம் ஒரு தன்மையாகக் கண்டவர்கள் திருவருளால் கண்ட நின்திருவடிக் காட்சியையும் அடியேன் காணவும் பெறுவேனோ?
(34)
ஊனிருந்த காயம் உடனிருப்ப எந்தைநின்பால் | வானிருந்த தென்னவுநான் வந்திருக்கக் காண்பேனோ. |
(பொ - ள்) ஊனுடம்பாகிய இவ்வுடம்பின்கண் இருக்கும் போதே எங்கள் தந்தையே, உன்னிடத்தில் அறிவுவெளி கலந்தது போன்று அடியேன் வந்திருக்கவும் காணப் பெறுவேனோ?
(35)
தினையத் தனையுந் தெளிவறியாப் பாவியேன் | நினைவிற் பரம்பொருள்நீ நேர்பெறவுங் காண்பேனோ. |
(பொ - ள்) தினையளவாயினும் தெளிவறிவில்லாத கொடிய பாவியாகிய ஏழையேன் நினைவின்கண் ஒப்பில்லாத தனிமுதற் பொருளாகிய நீ நேர் பெறவுங் காண்பேனோ?
(36)
துன்பமெனுந் திட்டனைத்துஞ் சூறையிட ஐயாவே | இன்பவெள்ளம் வந்திங் கெதிர்ப்படவுங் காண்பேனோ. |
(பொ - ள்) பொறுக்கமுடியாத துன்பமென்னும் மேடுகளனைத்தையும் வாரிக்கொண்டு ஓடும்படியாக முதல்வனே நின்திருவடியின்பப் பெருவெள்ளம் தோன்றி இங்கே எதிர்ப்படவும் காண்பேனோ?
(37)
கல்லாத நெஞ்சங் கரைந்துருக எத்தொழிற்கும் | வல்லாய்நின் இன்பம் வழங்கினால் ஆகாதோ. |
(பொ - ள்) புகழ்நூல் பொருள் நூல்கள் எனப்படும் தோத்திர சாத்திரங்களாகிய இறைவன் நூல்களைக் கல்லாத ஏழையேன் நெஞ்சம் கரைந்து உருகும்படி எத்தொழிற்கும் வல்லவனாகிய நீ உன்னுடைய திருவடியின்பத்தை அடியேனுக்கு வழங்கியருளினால் ஆகாதோ?
(1)