சாற்றரிய இன்பவெள்ளந் தாக்குமதில் நீமுளைக்கில் | ஊற்றமுறு மென்னஅதில் உண்மைசொன்னால்ஆகாதோ. |
(பொ - ள்) அளவிட்டுச் சொல்ல முடியாத பேரின்பப் பெருவெள்ளம் திருவருளால் விளைந்தபோது, அவ் விளைவின்கண் நீ தோன்றியருள்வையானால் அடியேனுக்கு நிலையான உறுதியுண்டாம் என்று அதன் உண்மையை எடுத்து அடியேனுக்குத் திருவாய் மலர்ந்தருளினால் ஆகாதோ?
(20)
கையுங் குவித்திரண்டு கண்ணருவி பெய்யஅருள் | ஐயநின் தாள் கீழே அடிமைநின்றால் ஆகாதோ. |
(பொ - ள்) இரு கைகளையும் உச்சியின்மேல் ஏறக் குவித்துப் பணிந்து இருகண்களும் அருவிபோலக் கண்ணீர் பொழிய அருள் ஐயனே நின் திருவடியின்கீழே அடிமை உறுதியுடன் நின்றாலாகாதோ?
(21)
ஏதுந் தெரியா தெனைமறைத்த வல்லிருளை | நாதநீ நீக்கஒரு ஞானவிளக் கில்லையோ. |
(பொ - ள்) புலம்பு என்று சொல்லப்படும் கேவலத்தில் ஏதுந்தெரிய வொட்டாமல் அடியேனுடைய அறிவை முற்றாக மறைத்து நின்ற ஆணவ வல்லிருளை1 எம் தலைவனை நீ நீக்கியருள உன்பால் மூதறிவுப் பெருவிளக்கென்னும் சிவஞான தீபம் இல்லையோ?
(1)
பணியற்று நின்று பதைப்பறஎன் கண்ணுள் | மணியொத்த சோதிஇன்ப வாரிஎனக் கில்லையோ. |
(பொ - ள்) உலக வாயிலாக நிகழும் அடியேனுடைய எல்லாவகையான செயல்களும் நீங்கி, மனக்கலக்கமும் நீங்க எளியேன் கண்ணினுள் காணப்படும் மணியினை யொத்த அருட்பெருஞ்சோதியே பேரின்பப் பெருக்கு ஏழையேற்குக் கிடைப்பதில்லையோ?
(2)
எம்மால் அறிவதற எம்பெருமான் யாதுமின்றிச் | சும்மா இருக்கஒரு சூத்திரந்தான் இல்லையோ. |
(பொ - ள்) எம்பெருமானே, எங்களுடைய அறிவு முன்னிட்டு எம்மால் அறியப்படுதலொழிந்து யாதொரு முயற்சியுமில்லாமல் பேச்சற்றுச் செயலற்றுச் சும்மா இருக்கும்படி ஒரு சூழ்ச்சி தானில்லையோ? சூழ்ச்சி உபாயம். சும்மா இருப்பதென்பது சிவனே என்றிருப்பது.
(3)
1. | 'ஒன்றதாய்.' சிவஞான சித்தியார், 2. 4 - 8. |