நாய்க்குங் கடையானேன் நாதாநின் இன்பமயம் | வாய்க்கும் படிஇனியோர் மந்திரந்தான் இல்லையோ. |
(பொ - ள்) நாதனே அடியேன் நாயினுங் கடைப்பட்டவன் ஆயினேன். நின்திருவடிப் பேரின்பப் பெருவடிவம் ஏழையேனுக்கு வாய்க்கும்படி ஒரு மந்திரமு மில்லையோ?
(4)
ஊனாக நிற்கும் உணர்வைமறந் தையாநீ | தானாக நிற்கஒரு தந்திரந்தான் இல்லையோ. |
(பொ - ள்) உடம்பினையே யான் என்று நினைக்கின்ற உணர்வினை முற்றாக மறந்து, நான் நீயேயாகிப் பின்னி நிற்பதற்கு ஒரு சூழ்ச்சிதான் இல்லையோ? பின்னல் - அத்துவிதம்.
(5)
அல்லும் பகலும் அகண்டவடி வேஉனைநான் | புல்லும் படிஎனக்கோர் போதனைதான் இல்லையோ. |
(பொ - ள்) பேரண்டங்களே பெருவடிவாகக் கொண்டருளும் பெருமானே! இரவும் பகலும் நின் திருவடியினை நீக்கமறப் புணர்ந்து புல்லும்படி அடியேனுக்கோர் அறிவுரைப் போதனைதா னில்லையோ?
(6)
கண்டவடி வெல்லாநின் காட்சிஎன்றே கைகுவித்துப் | பண்டுமின்றும் நின்றஎன்னைப் பார்த்திரங்க வேண்டாவோ. |
(பொ - ள்) (உலகிடைக் காணப்படும் உயிர்ப்பொருள் உயிரில் பொருள் அனைத்தினுள்ளும் முதல்வன் வீற்றிருப்பதால்) கண்ட வடிவங்கள் யாவும் உன்காட்சியே என்று கைகூப்பி உலகியலறிவால் நின் தோற்றமே என் கட்டுநிலையாகிய முன்னும், பதியுணர்வால் உள்ளும் வெளியுமாய் நீ நின்றருளுகின்ற இருவகை நிறைவுணர்வு கண்டு ஒட்டு நிலையாகிய இப்பொழுதும் நின்வழி நிற்கின்ற அடியேனைப் பார்த்து இரங்கியருள வேண்டாவோ?
(1)
வாதனையோ டாடும் மனப்பாம்பு மாயஒரு | போதனைதந் தையா புலப்படுத்த வேண்டாவோ. |
(பொ - ள்) ஐயனே! உலகியல் நுகர்பொருளின் பழக்க நினைவுடன் ஆடித் திரியும் மனமாகிய பாம்பு மாய்ந்தடங்க அடியேனுக்கு உன்திருமந்திரத்தினைப் போதித்து அறிவுறுத்தியருள வேண்டாவோ?
(வி - ம்) ஐந்தெழுத்தே தெய்வமறை ஆயின் சிவயநம வந்ததெனக் காண்க மனத்து.
(2)
தன்னை அறியத் தனிஅறிவாய் நின்றருளும் | நின்னைஅறிந் தென்அறிவை நீங்கிநிற்க வேண்டாவோ. |