(பொ - ள்) ஆன்மாவானது தன்னையறியும் பொருட்டுத் தனிப் பேரறிவாய் நின்றருளும் நின் உண்மையினை அறிதல் வேண்டும். அறிந்து யான் உடம்பொடு கூடியறிகின்ற பாச ஞானத்தினின்று நீங்கி நின் அறிவினுள் அடங்கி நிற்க வேண்டாவோ?
(3)
அள்ளக் குறையா அகண்டிதா னந்தமெனும் | வெள்ளமெனக் கையா வெளிப்படுத்த வேண்டாவோ. |
(பொ - ள்) மெய்யடியார்கள் திருவருளால் முகக்க முகக்கக் குறையாத எல்லையில்லாத நின்திருவடிப் பேரின்பம் என்னும் பெருவெள்ளம் ஐயனே அடியேனுக்கு வெளிப்படுத்தியருள வேண்டாவோ?
(4)
அண்டனே அண்டர் அமுதேஎன் ஆருயிரே | தொண்டனேற் கின்பந் தொகுத்திரங்க வேண்டாவோ. |
(பொ - ள்) உயிர்க்குயிராய் நெருங்கி நிற்கும் தேவனே, தேவர்கட்குப் பேரமிழ்தமே, எளியேனுக்குரிய அரிய உயிரே, தொண்டனாகிய எனக்குப் பேரின்பங் கொடுத்து இரங்கியருள வேண்டாவோ?
(5)
பாராதே நின்று பதையாதே சும்மாதான் | வாரா யெனவும் வழிகாட்ட வேண்டாவோ. |
(பொ - ள்) உன்னுடைய முனைப்பறிவை முன்னிட்டு ஒன்றையும் பாராதே பொறிகளின் வழிநின்று துடியாதே; மவுனநிலையோடு கூடி வருவாயாக எனவும் திருவடிப் பேற்றினுக்குரிய நன்னெறியினைக் காட்டியருள வேண்டாவோ?
(6)
எண்ணிறைந்த மேன்மைபடைத் தெவ்வுயிர்க்கும் அவ்வுயிராய்க் | கண்ணிறைந்த சோதியைநாங் காணவா நல்லறிவே. |
(பொ - ள்) மெய்யடியார்களுடைய தூய எண்ணங்களை நிறைவேற்றி வைக்கும் மேன்மையினையுடைய, ஆன்மகோடிகளனைத்திற்கும் உயிர்க்குயிராய் அவற்றின்கண் தங்கியருளுகின்ற கண்ணிறைந்த திருவருட் சோதியினை நாம் கண்டு கும்பிடும்படி என்னுடைய நல்லறிவே வருவாயாக.
(1)
சித்தான நாமென் சடத்தைநா மென்னஎன்றுஞ் | சத்தான உண்மைதனைச் சாரவா நல்லறிவே. |
(பொ - ள்) அறிவு வடிவாகவுள்ள நாம், அறிவில்லாத மாயா காரியவுடம்பினை நாம் எனச் சொல்லித் திரிவது நீங்கி என்றும் ஒரு படித்தாயுள்ள சத்தாகிய மெய்ப்பொருளை நீங்காது சாரும்படி நல்லறிவே வருவாயாக.
(2)