பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


673


     (பொ - ள்) கல்லால மரத்தடியில் எழுந்தருளியிருந்து உபதேசம் செய்தருளுகின்ற கற்பகம் போன்றவரே, அடியேன் மட்டுந்தான் பொல்லாத வினைகளுக்குப் பொருந்திய இடமோ? வேறிடமில்லையோ? திருவாய்மலர்ந்தருள்வாயாக. கற்பகம் - பொன்மரம்.

(4)
தப்பிதமொன் றின்றியது தானாக நிற்கஉண்மை
செப்பியது மல்லால்என் சென்னியது தொட்டனையே.
     (பொ - ள்) தவறு ஏதும்இல்லாதபடி சிவமாந்தன்மையாகி நிற்கும் அடியேனுக்குச் "சிவசிவ" என்னும் சித்தாந்தப்பெருமறை யுண்மை உபதேசித்தது மட்டுமல்லாமல், குருவடிவாயெழுந்தருளி வந்து அடியேன் தலையனைத் தொட்டுத் திருக்கைசாத்தும் தீக்கையினையும் செய்தருளினையே.

(5)
மாசான நெஞ்சன்இவன் வஞ்சனென்றோ வாய்திறந்து
பேசா மவுனம் பெருமான் படைத்ததுவே.
     (பொ - ள்) எம்பெருமானே குற்றமான நெஞ்சுடையவன் யான் என்றும், வஞ்சகனென்றும் திருவுள்ளங் கொண்டுதானோ பேசாமையாகிய மவுனநிலையினை அடைந்தது.

(6)
கற்பதெல்லாங் கற்றேம்முக் கண்ணுடையாய் நின்பணியாய்
நிற்பதுகற் றன்றோ நிருவிகற்ப மாவதுவே.
     (பொ - ள்) உலகியல் நூல்கள் பலவுங் கற்றுள்ளேன். மூன்று திருக்கண்களையுடையவனே, தனித்தமிழ் நூல்களாகிய திருமாமறைகளும், மெய்கண்ட நூல்களும் கற்கும்பேறு பெற்றிலேன், அவை கற்றன்றோ நின்திருவருட் பணியாய் நிற்பது, அங்ஙனம் நின்றாலன்றோ வேறுபாடில்லா நிட்டை கைவரும்?

(7)
முன்னளவில் கன்மம் முயன்றான் இவனென்றோ
என்னளவில் எந்தாய் இரங்கா திருந்ததுவே.
     (பொ - ள்) அடியேன் முன்னாளில் அளவில்லாத தீவினைகள் செய்தவனென்றோ எந்தையே எளியேன்பால் இரங்காதிருந்தருளியது?

(8)
நெஞ்சகம்வே றாகி நினைக்கூட எண்ணுகின்ற
வஞ்சகனுக் கின்பம்எந்தாய் வாய்க்குமா றெவ்வாறே.
     (பொ - ள்) மனமானது அகமுகமாய் நாடாமல் வேறுபட்டுத் தேவரீரை இரண்டறக் கலக்க எண்ணுகின்ற வஞ்சகனாகிய எனக்கு எந்தையே நின்திருவடிப் பெரும்பேரின்பம் கிடைக்கும் வகை எப்படி?

(9)
பள்ளங்கள் தோறும் பரந்தபுனல் போல்உலகில்
உள்ளம் பரந்தால் உடையாய்என் செய்வேனே.