பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


678


அடுத் தடுத்து வந்து நின்திருவடிப் பேரின்பமே தந்தருள இரங்கியருள்வாயாக.

(3)
அண்டரண்டம் யாவுநீ, கொண்டுநின்ற கோலமே
தொண்டர்கண்டு சொரிகணீர், கண்டநெஞ்சு கரையுமே.
     (பொ - ள்) அண்டங்களில் வாழும் ஆருயிர்த் தொகையும் அவ்வண்டங்களும் உடலும் உயிரும் போன்று நின்னுடைய அகல் நிறைவினுள் அடங்கு நிறைவாய் அமைய நீ கொண்டருளியிருக்கும் திருக்கோலத்தினை நின்திருவருளால் தொண்டர்கள் அனைவருங்கண்டு சொரிகின்ற இன்பக் கண்ணீரினை எளியேன் கண்டு உருகாத என் நெஞ்சமும் உருகுகின்றது. அகல் நிறைவு - முழுவியாபகம். அடங்கு நிறைவு - வியாப்பியம்.

(4)
அன்னைபோல அருள்மிகுத்து, மன்னுஞான வரதனே
என்னையே எனக்களித்த, நின்னையானும் நினைவனே.
     (பொ - ள்) தாய் போன்று திருவருள் பெருகி என்றும் பொன்றாத நிலை பெற்றிருக்கின்ற மூதறிவு வள்ளலே, ஆன்மா என்று சொல்லப்படும் எளியேன் உண்மையினை நின்னோடு காணும்படி எனக்குத் திருவருள் புரிந்த உன்னையே அடியேனும் இடைறாது உள்குதலாகிய தியானத்தைப் புரியாநிற்பேன்.

(5)
 
                சங்கர சங்கர சம்பு - சிவ, சங்கர சங்கர சங்கர சம்பு

ஆதி அனாதியு மாகி - எனக்
    கானந்த மாயறி வாய்நின்றி லங்குஞ்
சோதி மவுனியாய்த் தோன்றி - அவன்
    சொல்லாத வார்த்தையைச் சொன்னாண்டி தோழி - சங்கர
     (பொ - ள்) தோழியே! எல்லாவற்றிற்கும் முதலாகித் தனக்கு மேம்பட்ட தொன்றில்லாத முழு முதலுமாகிப், பேரறிவுமாகி நின்று விளங்குகின்ற சிவபெருமான், பேரொளிப் பிழம்புசேர் மௌனத்திருக் கோலமாய்த் தோன்றியருளிச் செவியோசை யெனப்படும் வைகரிவாக்கினால் சொல்லப்படாததாயுள்ள மெய்ப்புணர்ப்பாம் பேருண்மையினை அறிவடையாளம் எனப்படும் சின்முத்திரையால் காட்டியருளினன்.

     (வி - ம்) மெய்ப்புணர்ப்பு - அத்துவிதம். பெருவிரல் இறையின் அடையாளம், சுட்டுவிரல் ஆன்மாவின் அடையாளம். இரண்டும் ஒன்று கூடி ஒன்றெனவும் சொல்ல வொண்ணாததாய், வேறு நிற்கும் இரண்டெனவும் சொல்லவொண்ணாததாய்ப் புணர்ந்து நிற்பது அத்துவித அடையாளம். நடுவிரல் இருவினையின் அடையாளம். மோதிரவிரல் மாயையின் அடையாளம். சுண்டு விரல் மலத்தின் அடையாளம்.