பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


688


இன்ப வடிவாகிய சிவநுகர்வு என்னும் பேரின்பம் விரும்பில் தன்முனைப்பற்று, திருவருளின் அறிவு மயமாகி அசைவறச் சிறிது நிற்பையானால் எல்லையில் வடிவமும் அழிவின்மையும் உண்மையறிவின்பப் பிழம்பும் ஆகிய சிவபெருமானைத் தெரியலாமென்றே மறைமுறை நீதியென்று ஆசானாக வந்த முதல்வன் அறிவுறுத்தியருளினன்.

(30)
 
 
திருவருள் ஞானஞ் சிறந்தருள் கொழிக்குங்
 
குருவடி வான குறைவிலா நிறைவே
 
நின்ற ஒன்றே நின்மல வடிவே
 
குன்றாப் பொருளே குணப்பெருங் கடலே
 
5ஆதியும் அந்தமும் ஆனந்த மயமாஞ்
 
சோதியே சத்தே தொலைவிலா முதலே
 
சீர்மலி தெய்வத் திருவரு ளதனால்
 
பார்முத லண்டப் பரப்பெலாம் நிறுவி
 
அண்டசம் முதலாம் எண்தரு நால்வகை
 
10ஏழு பிறவியில் தாழா தோங்கும்
 
அனந்த யோனியில் இனம்பெற மல்க
 
அணுமுத லசல மான ஆக்கையுங்
 
கணமுத லளவிற் கற்ப காலமுங்
 
கன்மப் பகுதித் தொன்மைக் கீடா
 
15 இமைப்பொழு தேனுந் தமக்கென அறிவிலா
 
ஏழை உயிர்த்திரள் வாழ அமைத்தனை
 
எவ்வுடல் எடுத்தார் அவ்வுடல் வாழ்க்கை
 
இன்ப மெனவே துன்ப மிலையெனப்
 
பிரியா வண்ணம் உரிமையின் வளர்க்க
 
20ஆதர வாகக் காதலும் அமைத்திட்
 
டூக மின்றியே தேகம் நானென
 
அறிவு போலறி யாமை இயக்கிக்
 
காலமுங் கன்மமுங் கட்டுங் காட்டியே
 
மேலும் நரகமும் மேதகு சுவர்க்கமும்
 
25மாலற வகுத்தனை ஏலும் வண்ணம்