தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

xxx

தாயுமானவடிகள் வரலாற்றுச் சுருக்கம்
     பெறற்கரிய பேரறிவினைப் பெற்றிருந்தும் எய்தற்பாலதாய் பேரின்பப் பெருநிலையை எய்தாமலும், காலமெனுங் கரையிலா மணற்பரப்பில் தம் காலடிச் சுவட்டினைப் பதிய வைக்காமலும் வறிதே தம் வாணாளைக் கழித்து வரும் மக்கள் வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையேயோ? இத் திறத்த மக்களை நன்னெறிக்கண் உய்த்திடும்பொருட்டு அவ்வக்காலத்தே திருவருளால் தோன்றிச் சைவத் தனித் தொண்டாற்றிய குரவர் பலர். அவருள், பதினேழாம் நூற்றாண்டி னிறுதியில் பெரும்புகழுடன் விளங்கிய தாயுமான அடிகளாரின் வாழ்க்கை வரலாறு அறிஞர் போற்றிப் பின்பற்றக் கடவதொன்றாகும்.

     சோழவள நாட்டிலே திருமறைக் காட்டிலே இற்றைக்கு ஏறக்குறைய முந்நூற்றைம்பது ஆண்டுகட்கு முன்னர், கேடிலியப்ப பிள்ளை என்ற சைவ வேளாளப் பெருந்தகையார் ஒருவரிருந்தார். இவர் கல்வி அறிவு ஒழுக்கங்களில் தலைசிறந்து விளங்கி யிருந்தாராதலால் திருமறைக்காட்டுத் திருக்கோயிலா தீனத்தார் இவரைக் கோயிற் கண்காணிப்பாளராகத் தேர்ந்தமைத்தனர்.

     இஃதிவ்வாறாக, திரிசிராப்பள்ளியில் அக்காலைச் செங்கோலோச்சிவந்த விசய இரகுநாத சொக்கலிங்க நாயகர் இவர் தம் அருமை பெருமைகளைக் கேள்வியுற்று அளவிலா மகிழ்வெய்தி இவரை அன்புடன் வரவழைத்துத் தம் அரசுப் பெருங்கணக்கராக அமர்த்திக்கொண்டார். அப் பணியை ஏற்றுக்கொண்ட கேடிலியப்பர் அரிதிலுழைத்து அரசரின் பெருமதிப்பிற்குரியராகி இன்புடன் வாழ்ந்துவந்தார். எனினும், தமக்கிருந்த ஒரே மகனாகிய சிவசிதம்பரம் என்பானை, மகப்பேறின்றி வருந்தி யிருந்த தம் தமையனாருக்கு வளர்ப்புப் பிள்ளையாக அன்பு மகன்மையாக முன்னரே அளித்துள்ளனர்.

     மகப்பேறு வேண்டிச் சிரபுரப் பெம்மானின் திருவடி மலரை அல்லும்பகலும் இடைவிடாது வழுத்தி வராநின்ற இச்சீரியர் தம் குறை தீர இவருக்கு ஆண் மகவொன்று அருளால் பிறந்தது. உலகெலாம் உய்யுமாறு திருவருட் பெருமையை விளக்கி ஓத வந்த ஒப்பற்ற இச் செல்வக் குழந்தைக்குச் சிராப்பள்ளித் தனிமுதலின் பெயராகிய தாயுமானார் என்ற திருப்பெயரே சூட்டப்பட்டது. குழந்தையும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து பாலொழுகுந் திருமுகத்தில் அறிவுச் சுடர் வீசி, அன்பு பெருக்கி, ஆண்டில் முதிர்ந்து, தென்மொழிக் கடலையும் வடமொழிக் கடலையும் முறையே நீந்திக் கரைகாண்ப தாயிற்று.