| ஆசைநிக ளத்தினை நிர்த்தூளி படவுதறி |
| ஆங்கார முளையைஎற்றி |
| அத்துவித மதமாகி மதம்ஆறும் ஆறாக |
| அங்கையின் விலாழியாக்கிப் |
| பாசஇருள் தன்னிழ லெனச்சுளித் தார்த்துமேல் |
| பார்த்துப் பரந்தமனதைப் |
| பாரித்த கவளமாய்ப் பூரிக்க வுண்டுமுக |
| படாமன்ன மாயைநூறித் |
| தேசுபெற நீவைத்த சின்முத்தி ராங்குசச் |
| செங்கைக் குளேயடக்கிச் |
| சின்மயா னந்தசுக வெள்ளம் படிந்துநின் |
| திருவருட் பூர்த்தியான |
| வாசமுறு சற்சார மீதென்னை யொருஞான |
| மத்தகச மெனவளர்த்தாய் |
| மந்த்ரகுரு வேயோக தந்த்ரகுரு வேமூலன் |
| மரபில்வரு மௌனகுருவே. |
(பொ - ள்) "ஆசைநிக . . . சுளித்தார்த்து" - ஆசையாகிய விலங்கினை எஞ்சாது அற்று ஒழியும்படி உதறி (யான் எனது என்னும் அகம்புறமாக எழும் செருக்காகிய) ஆங்காரமுளையை வேரறப் பிடுங்கி யெறிந்து, (மெய்ப்புணர்ப் பென்று சொல்லப்படும்) அத்து விதமதத்தை யுடையதாகி, (முக்கூற்றுப்புறச்சமயம் எனப்படும்) ஆறு நெறிகளும் (வெள்ளப் பெருக்கெடுத்து ஓடும்) ஆறுகளாக புழைக்கையின் உமிழ்நீராகச் செய்து, பாசமாகிய இருளைத் தன்னுடைய நிழலென்று, அடங்காச் சினங்கொண்டு பெருமுழக்கஞ் செய்து;
"மேல்பார்த்துப் . . . .அடக்கி" - மேலே நோக்கிப் பரவிய மனத்தினைப் பெருங்கவளமாக நிறையவுண்டு, (முகமூடி யென்று சொல்லப்படும்) முகபடாத்தை யொத்த மாயையினை நசுக்கி, (மெய்யுணர்வு) ஒளிபெற நீ அமைத்தருளிய அறிவடையாளமாகிய தோட்டியினைத் தாங்கியுள்ள செங்கையினிடமாக அடக்கி;
"சின்மயா . . . வளர்த்தாய்" - வாலறிவின் வண்ணமாகிய பேரின் பப்பெருவெள்ளத்தாழ்ந்து நின்திருவருள் நிறைவினில் உறைதல் பொருந்திய பரந்த (யானைகட்டும்) கூடத்திலே அடிமையை மெய்யுணர்வுமதம் பொழிகின்ற யானை என வளர்த்தருளினை;