ஆசமனம் எனப்படும் முக்குடி நீராகப் பருகி உட்கொள்ளவும் வன்மையுடையீர், வானவர்கோன் உலகமும், அவ்வுலகினுள் ஈரிரண்டு கொம்புடைய வெள்ளை யானையுமே கைக்கு எளிமையாகப் பூப்பந்து போன்றெடுத்து விளையாடி மகிழ்வீர்;
"ககனவட்டத் . . . . . . இலிரோ" - வானவெளி அனைத்தையும் ஒரு சிறிய கடுகைத் தொளைத்து அதனுள் அடக்கி, (அதன்கண்) குலமலை எட்டையும் நலமுறக் காணும்படி செய்வீர்; (இம் மட்டுமன்றி) மேலும் மேலும் அளவிடப்படாத சித்திகளை யெல்லாம் செய்து காட்டும் பெருவல்லமையுள்ள நீவிர், அடிமையாகிய எளியேன்முன் விளக்கமுற வந்து காட்சிதரும் சித்தியினைக் கைகொண்டிலீரோ?
"வேதாந்த . . . சித்தர்கணமே" - மறைமுடிவும் முறைமுடிவும் ஆகிய வேதாந்த சித்தாந்த சமரச மென்னும் வேறுபாடில்லாத நல்ல நிலைபெற்ற மூதறிவாம் மெய்யுணர்வினையுடைய சித்தர்தம் சீரிய திருக்கூட்டமே.
(வி - ம்) திக்கு - திசை. திக்கந்தம் - திசைமுடிவு. துருவம் - நின்றவிடத்தே நிலைபெற்று இடம்பெயராதிருக்கும் எழிலார் விண்மீன். ஆசமனம் - முக்குடிநீர். ஐராவதம் - வெள்ளையானை. ககனம் - வெளி. அஷ்ட - எட்டு. குலமலை - பெரியமலை.
துருவ மண்டிலத்தின் இயல்பும் சிறப்பும் வருமாறு :
ஐம்பெரும் பூதமும் உணவின்கண் பொருந்தும்; அந்த உணவு வண்ணம் மழையினாலுண்டாம். அம் மழைக்குக் காரணமான ஞாயிறு முதலாகிய கதிர்களும், நாண்மீன்களும் காற்றினாற் பிணிக்கப்பட்டு நீங்காமாற் சுழன்றுகொண்டிருக்கும்படி செய்யும் மேருமலையினுச்சியிலுள்ள ஒளிச் சக்கரம்.
துருவன் என்பவன் சுவாயம்பு மனுவின் மகனாகிய உத்தானபாதனுக்கு மகனாவன். இவன் ஒருநாள் தன் தந்தை மடிமீதேறித் தன் சுருதி என்னும் சிற்றன்னை மடிமீதேறலுற்றனன். அவள் நீ என் வயிற்றில் பிறக்கும்பேறு பெறாது, என் மாற்றாளாகிய சுநீதி மகனாயினை என்று கடிந்துசொல்லக் கேட்டனன்; அது பொறாது அத் துருவன் தன் தாயிடஞ் சென்று விடைபெற்றுப் போய்த் தவமியற்றினன். திருமால் வெளிப்பட்டனர். அவர் கட்டளையின்படி காரியம்பதியை அடைந்து மருத்துவ முதல்வச் சிவக்கொழுந்தின் அண்மையில் ஒரு சிவக்குறியினை நிறுவி வழிபட்டு வந்தனன். சிவபெருமான் திருவருளால் துருவ மண்டலத்தை யடைந்தனன். அதனால் அதற்குத் துருவ மண்டிலம் என்னும் பெயர் வழங்குவதாயிற்று. இந்நிலைக்குப் பண்டுள்ள செந்தமிழ்ப் பெயர் வடமீன்.
கடல் ஏழ் என்பன வருமாறு: 1. உவர்நீர், 2. நன்னீர், 3. பால், 4. தயிர், 5. நெய், 6. கருப்பஞ்சாறு, 7. தேன் என்பன. இவை வருமாறு:
| "உப்புத் தேனிக்கு வெண்டயிர் நெய்பால் |
| அப்புக் கடலே ழாகு மென்ப." |
| - பிங்கலம், 585. |