சொன்னவ னியாவனவன் முத்திசித் திகளெலாந் | தோய்ந்த நெறியேபடித்தீர் | சொல்லுமென அவர்நீங்கள் சொன்னஅவை யிற்சிறிது | தோய்ந்தகுண சாந்தனெனவே | மின்னல்பெற வேசொல்ல அச்சொல்கேட் டடிமைமனம் | விகசிப்ப தெந்தநாளோ | வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற | வித்தகச் சித்தர்கணமே |
(பொ - ள்) "கன்னலமு . . . ஈட்டுதமிழ்" - கருப்பஞ்சாற்றின் சுவை போலவும், வாழை, மா, பலா என்று சொல்லப்படும் முப்பழச் சுவை போலவும், (புறத்துக் கண்டதும்) நாவானது ஊறுதற்கு வாயிலாகவுள்ள கற்கண்டெனவும் அடியேன் பாடும் அன்புப் பாடலுக்கு (நம்பியாரூரர் சேக்கிழார் அடிகள் முதலிய மெய்யடியார்கட்கு விழுமிய முழு முதல்வன் அடியெடுத்துக் கொடுத்தருளியது போன்று அடியேனுக்கு) கடவுளர்கள் அடியெடுத்துத் தந்தருளியதல்ல; (அடியேன் பலகால் ஓவாது) அழுது அழுது (கொண்டதுவிடாக் கொள்கையுடைய) பேய்போல் (அடியேன்) கருத்திலெழுந்த எண்ணங்களை யெல்லாம் எளியேனுடைய அறிவு அறியாமையென்னும் இருபகுதியினாலும் ஈட்டப்படும் செந்தமிழ்;
"என்றமிழினுக் . . . கிருத்தலால்" - எளியேன் பாடிய இத் தமிழினுக்கு உலகத்தில் உள்ளவர்கள் குற்றம் சிறிதுங் கூறாது (இத்தமிழ் மாலையினை) விழைவுடன் படித்தற்கே பேரன்புபூண்டிருத்தலால்;
"இத்தமிழையே . . . எந்நாளோ" - இத்தமிழ்மாலையினை வீடுபேறு கைகூடப்பெற்ற நன்னெறி யொழுகும்தன்மை கற்றுவல்ல நற்றவத் தோர்களே! சொன்னவன் யாவன் என்று சொல்லுமென (நும்மை வினவின் (நீங்கள்) விடையாக நற்பண்பு சிறிது பயின்ற அமைந்த குணத்தோனாகியவனென்று கூறுவீர்களாயின், (அந்த) இனிய நல்ல புகழுரைகளை அடிமை கேட்டு மனமகிழ்ச்சி யெய்தும் நாள் எந்த நாளோ.
"வேதாந்த . . . சித்தர்கணமே"..
(வி - ம்) கன்னல் - கரும்பு. கண்டு - கற்கண்டு. இன்னல் - னிய நன்மையுள்ள. சாந்தன் - அமைந்த குணத்தோன். விகசிப்பது - மலர்வது; மகிழ்வது.
ஆண்டவன் அடியெடுத்து வெளிப்படக் கொடுத்த இடங்கள்; நம்பியாரூரர்க்கு - "என் பெயர் பித்தனென்று பாடுக" எனவும் "தில்லைவா ழந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்" எனவும் உள்ள விரண்டு. சேக்கிழாரடிகட்கு "உலகெலா" மென ஒன்று.
அமுதாற் பெறும் வாய்மை வருமாறு :