கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள் | கற்றும்அறி வில்லாதஎன் | கர்மத்தை யென்சொல்கேன் மதியையென் சொல்லுகேன் | கைவல்ய ஞானநீதி | நல்லோ ருரைக்கிலோ கர்மமுக் கியமென்று | நாட்டுவேன் கர்மமொருவன் | நாட்டினா லோபழைய ஞானமுக்கியமென்று | நவிலுவேன் வடமொழியிலே | வல்லா னொருத்தன்வர வுந்த்ரா விடத்திலே | வந்ததா விவகரிப்பேன் | வல்லதமி ழறிஞர்வரின் அங்ஙனே வடமொழியி | வசனங்கள் சிறிதுபுகல்வேன் | வெல்லாம லெவரையும் மருட்டிவிட வகைவந்த | வித்தையென் முத்திதருமோ | வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற | வித்தகச் சித்தர்கணமே. |