பற்றுவன அற்றிடு நிராசையென் றொருபூமி | பற்றிப் பிடிக்கும்யோகப் | பாங்கிற் பிராணலயம் என்னுமொரு பூமிஇவை | பற்றின்மன மறும்என்னவே | கற்றையஞ் சடைமௌனி தானே கனிந்தகனி | கனிவிக்க வந்தகனிபோல் | கண்டதிந் நெறியெனத் திருவுளக் கனிவினொடு | கனிவாய் திறந்தும்ஒன்றைப் | பெற்றவனு மல்லேன் பெறாதவனு மல்லேன் | பெருக்கத் தவித்துளறியே | பெண்ணீர்மை என்னஇரு கண்ணீ ரிறைத்துநான் | பேய்போ லிருக்கஉலகஞ் | சுற்றிநகை செய்யவே யுலையவிட் டாயெனில் | சொல்லஇனி வாயுமுண்டோ | சுத்தநீர்க் குணமான பரதெய்வ மேபரஞ் | சோதியே சுகவாரியே. |
(பொ - ள்) "பற்றுவன . . . அறுமென்னவே" - (மெய்வாய் கண் மூக்குச் செவியென்னும் ஐம்பொறிகளாலும்) பற்றப்படுவனவாகிய (ஊறு, சுவை, உரு, மணம், ஓசை என்னும்) புலன்கள் ஐந்தினிடத்தும் பற்று அற்று, அவாவின்மை யென்று சொல்லப்படும் தூய நிலத்தே நிலைநிற்றற்பொருட்டு அதனைப் பற்றிப் பிடிப்பதற்கு வாயிலாகிய உயிர்ப் பொடுக்கமென்னும் அகத்தவ அமைதி நிலத்தை, மனம் பற்றின் அம் மனத்தின் அசைவு அறுமென்று;
"கற்றையஞ் . . . அல்லேன்" - நெருங்கிய திருச்சடையினையுடைய மௌனியானவர் செவ்வி முதிர்வால் தானே கனிந்த வாழைக்கனி: அக் கனி தன்னைச் சார்ந்த ஏனைக் கனிகளைக் கனிவித்தற்பொருட்டு வந்தருளிய கனியாகும். அதுபோல இச் செந்நெறியாமெனத் திருவுள்ளக் கனவினொடு, இனிமையே மொழியும் திருவாய் திறந்து ஒப்பில் மறையொன்றைச் செவியறிவுறுத்த அடியேன் பெற்றவனுமல்லேன், (சொல்லாற் பெறாவிடினும், குறிப்பு மொழியால் உணர்த்தப்பெற்றேன் ஆதலால்) பெறாதவனுமல்லேன்;
"பெருக்கத் . . . உண்டோ" - (இந்நிலையில் அடியேன்) மிகுதியும் இளைப்புற்றுச் செயலற்றரற்றி (காவற்றுணையின்றி உரங்கொள்ள இயலாத) பெண்தன்மை போன்று, இருகண்களினின்று நீங்கா ஒழுக்கெனக் கண்ணீரிறைத்து அடியேன் வையத்து அலகையெனப்படும் பேய்போன்றிருக்கவும், எளியேனைக் கண்டு உலகோர் சூழ்ந்து நின்று எள்ளற் சிரிப்புச் சிரிக்கவும் எளியேன் எங்கணும் நிலையின்றி அலையவும் நீ கைவிட்டுவிட்டாய் என்று சொன்னால், மேற்கொண்டு சொல்லுவதற்கு வாய்தானுமுண்டோ? (இல்லையென்றபடி.)