பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

174
இரும்புநேர் நெஞ்சகக் கள்வனா னாலும்உனை
    இடைவிட்டு நின்றதுண்டோ
  என்றுநீ யன்றுயான் உன்னடிமை யல்லவோ
    யாதேனும் அறியாவெறுந்
துரும்பனேன் என்னினுங் கைவிடுதல் நீதியோ
    தொண்டரொடு கூட்டுகண்டாய்
  சுத்தநிர்க் குணமான பரதெய்வ மேபரஞ்
    சோதியே சுகவாரியே.
     (பொ - ள்) "அரும்பொனே . . . . . . ஆடினேன்" - கிடைத்தற்கரிய அருமை மிக்க பொன்னே! ஒளியுடை மாணிக்கமே! (அடியேனின்) அன்பே! அவ்வன்பின்கண் ஊறும் பேரறிவே! அவ்வறிவின்கண் ஊறும் பேரின்பப் பெருவெள்ளமே! என்றென்று புகழ்ந்து நனி பாடினேன்; (அப் பாடலின் பயனாகத் தோன்றும்) ஆடுதலையும் புரிந்தேன்.

     "நாடி . . . அயர்ந்தேன்யான்" - இடையறாது எண்ணி எண்ணி மிகவும் விழைந்து (ஓவாது) அழைத்துள்ளேன், அழைத்தழைத்து நாக்கு வற்றினேன்; பொறுக்கலாற்றாது பெருகக் கண்ணீர் விட்டு அழுதேன்; மெய்ம்மயிர் பொடித்து, உச்சியின்மேல் இரு கைகூப்பி (ஆராமை மிகுதியால்) இரு கண்களினின்றும் மேகம் பொழிவதை யொத்துக் கண்ணீர் மழைபொழிய, அடியேன் மனமிக நொந்து வாடுதலுற்றேன்.

     "இரும்புசேர் . . . கண்டாய்" - இரும்பையொத்த வன்மையான நெஞ்சமும் (நல்ல வழியிற் செல்லாது பொல்லாவழியிற் செல்லும்) வஞ்சனை நிறைந்த நெஞ்சமும் (அடியேன்) உடையனானாலும் அடிகளை இடைநீங்கி யாண்டேனும் நின்றதுண்டோ? எந்நாளில் நீ உள்ளாய் அந்நாள் தொட்டு அடியேனும் உளன்; (அம்மட்டுமன்று) அந்நாள் தொட்டு அடியேன் நின்திருவடியினுக்கு மீளா அடிமையல்லவோ? அறியவேண்டுமென்று சொல்லப்படும் சிறந்த பண்புகளில் ஒரு சிறிதும் வாய்க்கப்பெறாத யான் பயனற்ற வெறிய துரும்பை யொத்தவனென்றாலும் (அடிகளே நீர்) கைவிட்டுவிடுதல் அறமுறையாகுமோ? (அடிப்பட்டு வழிவழியாக நின்தொண்டே பயின்றுவரும்) அடித்தொண்டருடன் அடியேனையும் கூட்டுவித்து அருள்வாயாக.

         "சுத்தநிர்க் . . . .சுகவாரியே" -

     (வி - ம்.) ஆனந்தம் - இன்பம். வெள்ளம் - பெருக்கு. உலறல் - வாடுதல். வேசற்று - துன்புற்று. சிலிர்த்து - பொடித்து.

     முப்பொருளும் தொன்மையவென்னு முண்மை வருமாறு :

"பதிபசு பாசம் எனப்பகர் மூன்றிற்
 பதியினைப் போற்பசு பாசம் அனாதி
 பதியினைச் சென்றணு காப்பசு பாசம்
 பதியணு கிற்பசு பாசம் நிலாவே."
- 10. 159
(7)