கற்போன்று உருகாத நெஞ்சமாகிய வலிய கடுமையும், வெண்ணெய் போன்று உருகும் நெஞ்சமாகிய மென்மையும் எங்கேயுள்ளன? இவ்வுலகங்களை யெல்லாம் படைப்பது எது? வினைமுதற் றன்மையாகிய கருத்தாத் தன்மை எங்கிருந்துண்டாகின்றது? காணப்படும் நிலம் நீர் முதலிய பூத வேறுபாடுகள் எங்கிருந்துண்டாகின்றன? நிலையில்லாத பொய்யென்பது எது? நிலையுள்ளதாகிய மெய்யென்பது யாது? இணக்கமாகிய இதமும், பிணக்கமாகிய அகிதமும் எனவ? நன்மையும் தீமையும் யாண்டுள்ளன? பொறுத்துக்கொள்ளுந் தன்மையும், பொறுத்துக்கொள்ளாத் தன்மையும் யாண்டுள்ளன?
"எவர்சிறியர் . . . பொருளே" - தீ நெறியொழுகும் சிற்றினத்தார் யாவர்? நன்னெறியொழுகும் பெரியவர் யாவர்? உற்றுழி உதவும் உறவினர் யாவர்? உற்றது பறித்து ஊறுபுரியும் பகைவர் யாவர்? எல்லாம் உன் திருவருட் குறிப்பின்றி வருவன உளவோ? இம்மையிலும், மறுமையிலும் உயிரினுக்கு உயிராகி எங்கும் நீக்கமற நிறைந்து நின்றருளும் மெய்ப்பொருளே!
(வி - ம்.) அவன் - முழுமுதற் கடவுள்; சேய்மைச் சுட்டாக வுள்ளவன். அணு - நுண்ணிய வடிவப் பொருள்; மண். ஆப்தர் - உறவினர். ஆப்தர்மொழி - அப்பர் திருமொழி. புவனம் - உலகம். இகம் - இம்மை. பரம் - மறுமை; அம்மை.
இறைவனுக்கு உலகமும் ஒரு திருமேனியாதலின் அவன் திருவுள்ளங்கொண்டாலன்றி அவ்வுலகம் அசையாது. பம்பரம் சுற்றிவிடுவாரையும், ஊசல் ஆட்டி விடுவாரையும், நாழிகை வட்டில் முறுக்கிவிடுவாரையும் பெறாமல் இயங்காமை இதற்கொப்பாம். அவன் ஆடவே எல்லாம் ஆடும் உண்மை வருமாறுணர்க:
| "தத்துவம் ஆடச் சதாசிவந் தானாடச் |
| சித்தமும் ஆடச் சிவசத்தி தானாட |
| வைத்த சராசரம் ஆட மறையாட |
| அத்தனும் ஆடினான் ஆனந்தக் கூத்தன்றே." |
| - 10. 2743 |
| "ஆட்டுவித்தா லாரொருவ ராடா தாரே |
| அடங்குவித்தா லாரொருவ ரடங்கா தாரே |
| ஓட்டுவித்தா லாரொருவ ரோடா தாரே |
| யுருகுவித்தா லாரொருவ ருருகா தாரே |
| பாட்டுவித்தா லாரொருவர் பாடா தாரே |
| பணிவித்தா லாரொருவர் பணியா தாரே |
| காட்டுவித்தா லாரொருவர் காணா தாரே |
| காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே." |
| - 6. 65 - 3. |